மெட்ராஸ் தினம்.. சென்னையின் முகத்தையே மாற்றிய கொடுந்தீ.. திட்டமிட்டு எரிக்கப்பட்டதா மூர் மார்கெட்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: அன்றைய தினம் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட அந்த பயங்கர தீ விபத்து பல நூறு பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது.

சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பழைமையான நகரங்களில் ஒன்றான சென்னை பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது.

தலைநகர் சென்னையில் இருக்கும் பல முக்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களைக் காலப்போக்கில் நாம் இழந்துள்ளோம். அப்படி நாம் இழந்த மூர் மார்க்கெட்!

நடிகர் ஜூனியர் என்டிஆர்-அமித்ஷா டின்னர்! பின்னணியில் 4 முக்கிய காரணம்! ஆபரேஷன் சவுத்தில் பாஜக ஆர்வம்நடிகர் ஜூனியர் என்டிஆர்-அமித்ஷா டின்னர்! பின்னணியில் 4 முக்கிய காரணம்! ஆபரேஷன் சவுத்தில் பாஜக ஆர்வம்

மோசமான தீ விபத்து

அது 1985ஆம் ஆண்டு! எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது மே 25 நள்ளிரவில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே திடீரென தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சுமார் 80 அடிக்கு மேல் தீ பிடித்து எரிந்துள்ளது. அன்று ஒரே நாளில் பல நூறு பேரை அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நடுத்தெருவுக்கு வந்தனர். அன்று என்ன நடந்தது? பார்க்கலாம்!

என்ன காரணம்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட சமயத்தில் தென்னிந்தியாவுக்கே முக்கிய நகரமாக இருந்தது சென்னை. இங்கு தான் பல முக்கிய கூட்டங்கள் நடைபெறும். அந்த சமயத்தில் பிராட்வே பகுதியில் மீன் மார்கெட் ஒன்று இயங்கி வந்தது. இருப்பினும், அது சுகாதார சீர்கேட்டுடன் சேறும் சகதியுமாக இருந்தது. இதை அப்போது முனிஸிபாலிட்டியாக இருந்த சென்னை முனிஸிபாலிட்டியின் தலைவராக லெட் கர்னர் ஜார்ஜ் மூர் ஒரு முறை பார்த்தார்.

இரண்டே ஆண்டு

மூர் மார்கெட் இப்படி இருப்பது தனது நிர்வாகத்திற்கு இழுக்கு தந்துவிடும் என நினைத்த அவர், சென்டிரல் ரயில் நிலையம் அருகே, அதாவது இப்போது சென்னை புறநகர் ரயில் நிலைய கட்டிடம் இருக்கும் இடத்தில் புதிய மார்க்கெட்டை கட்ட முடிவு செய்தார். இதற்காக 1898ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மளமளவென நடந்த கட்டுமான பணிகள் வெறும் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 1900ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்த மார்க்கெட் முழுவதும் கட்டி திறக்கப்பட்டது.

வணிக வளாகம்

லெட் கர்னர் ஜார்ஜ் மூர் நினைவாக இந்த கட்டிடம் மூர் மார்க்கெட் என்றே அழைக்கப்பட்டது. மிகக் கம்பீரமாகக் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டிடம் வெறும் 85 ஆண்டுகளில் அழிந்து சின்னாபின்னமானது பெரும் துயரம். ஷாப்பிங் மால்கள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மூர் மார்க்கெட் தான் சென்னையின் ஒரே வணிக வாளகம். சுற்றுலா தளம் என்றும் கூட கூறலாம்.

என்ன கேட்டாலும் கிடைக்கும்

மூர் மார்க்கெட்டில் ஒருவர் என்ன கேட்டாலும் கிடைக்கும். புத்தகம் மூலம் டெலிபோன் வரை அனைத்தும் கிடைக்கும். சந்திரன் சூரியன் தவிர அனைத்தும் மூர் மார்கெட்டில் கிடைக்கும் எனக் கூறுவாராம் எழுத்தாளர் சவி! இப்படி பெரும் புகழ் கொண்ட மூர் மார்க்கெட்டிற்கு மைசூர் மகாராஜா, அண்ணா, அப்துல் காலம் எனப் பெருந்தலைவர்கள் அனைவரது வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.

உலக புகழ்

இப்போது இருக்கும் ஓஎல்எக்ஸ் தளத்தைப் போல அப்போதே “வேண்டாத பொருளைக் கொடுத்துவிட்டு, வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம்” என்பதே மூர் மார்க்கெட்டின் அடிப்படை வியாபார யுத்தம். மூர் மார்க்கெட் சர்வதேச அளவிலும் கூட பெரும் புகழைப் பெற்ற ஒன்றாகும். அதற்கு ஒரு உதாரணம் அமெரிக்காவில் வெளியான புகழ்பெற்ற வார இதழ் பன்ச். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அந்த பத்திரிக்கையின் பல முக்கிய பதிப்புகள் அழிந்துவிட்டது. இருப்பினும், அவை மூர் மார்க்கெட்டில் இருப்பதைக் கேள்விப்பட்ட பன்ச் இதழ் ஊழியர்கள் இங்கு வந்து வாங்கிச் சென்று உள்ளனர்.

மத்திய அரசு

இப்படி பெரும் சிறப்பை கொண்ட மூர் மார்க்கெட்டிற்கு அப்படியொரு முடிவு வரும் என யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை. 1980களில் சென்னை மளமளவென வளர்ச்சி அடையவே சென்டிரல் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. புறநகர் ரயில் நிலையத்தை சென்டிரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்கெட் இருந்த இடத்தில் கட்ட திட்டமிட்டது. இருப்பினும், அதற்கு மூர் மார்கெட் கடை உரிமையாளர்களிடம் இருந்து மிகக் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

பெரிய தீ

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராகக் கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது தான் இந்த மோசமான சம்பவம் 1985 மே 25இல் அரங்கேறியது. மே 25இல் நள்ளிரவு மூர் மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 100 அடிக்கு கொழுந்துவிட்டு எரிந்த அந்த தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. இருப்பினும், சுமார் 10 மணி நேரம் போராடிய பின்னரே அவர்களால் தீயை அணைக்க முடிந்தது.

வாழ்வாதாரம்

அதற்குள் மூர் மார்கெட்டில் இருந்த பெரும்பாலான கடைகளும் முற்றிலுமாக நாசமடைந்தன. இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் என்று கூறப்பட்டாலும் கூட, தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ரயில்வே நிலையத்திற்காகத் திட்டமிட்டு சிலர் இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறினர். இருப்பினும், அதுவும் உறுதியாகவில்லை. அதன் பின்னர் அல்லிக்குளம் பகுதியில் அரசு வணிக வளாகத்தைக் கட்டிக் கொடுத்து இருந்தாலும், மூர் மார்கெட் சிறப்பை யாராலும் திரும்ப எடுத்து வர முடியாது என வேதனை தெரிவிக்கின்றனர்.

English summary
History of Moore market in Chennai: (சென்னையில் தீக்கிரையான மூர் மார்கெட் வரலாறு) Madras day what happened to chennai moore marker.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-day-back-in-history-chennai-moore-market-fire-that-changed-face-if-central-472082.html