சென்னையில் பொது மக்களுக்கு பாதுகாப்பான பூங்கா: கருத்து கேட்கும் மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் உள்ள பூங்காக்களை பொது மக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி, பூங்காத் துறையின் சார்பில் 718 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 547 பூங்காக்கள் தனியாரிடமும், 111 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களை பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில், GCC Parks Survey | பூங்கா சர்வே என்ற இணைப்பில் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இதில் பூங்கா பயன்பாடு, பிடித்த அம்சம், மேம்படுத்த வேண்டியது, பாதுகாப்பான பூங்காவாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் வரும் 15-ம் தேதி இது தொடர்பாக தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/865327-chennai-corporation-seeks-feedback-for-public-for-safe-park.html