சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை நாளை தமிழில் வெளியீடு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை நாளை தமிழில் வெளியாகும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கான காலநிலை மாற்ற வரைவு செயல் திட்ட அறிக்கை சென்னை மாநகராட்சி இணையத்தில் கடந்த 12-ம் தேதி ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அக்டோபர் 26-ம் தேதிக்குள் கருத்துகளை மின்னஞ்சல் மூலம் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்று சிபிஎம், பாமக ஆகிய கட்சிகளும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்நிலையில், சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை நாளை (செப்.27) தமிழில் வெளியாகும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் 26.10.2022 வரை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த 2005 அக்டோபரில் தொடங்கப்பட்ட ‘சி40 மேயர்கள்’ அமைப்பு இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தயார் செய்வதற்கு முன்பாக பல்வேறு அரசு துறைகள், காலநிலை மாற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி “நெகழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகள் இந்த செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்கதக்க மின்சாரம் – 8 இலக்குகள்

  • 2050ம் ஆண்டுக்கு 100 சதவீத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பயன்பாடு
  • 2050ம் ஆண்டுக்குள் அனல் நிலையங்களுக்கு மாற்றாக புதுப்பிக்க தக்க எரிசக்தி உற்பத்தி
  • வீடுகள் சோலார் மின் உற்பத்தி பயன்பாட்டை அதிகரிப்பது.

குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் கட்டுமானங்கள் – 8 இலக்குகள்

  • அனைத்து கட்டிடங்களையும் குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைப்பது.
  • இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

போக்குவரத்து – 10 இலக்குகள்

  • 2050ம் ஆண்டுக்குள் 100 சதவீதம் மின்சார பேருந்துகள்.
  • 80 சதவீத பயணங்களை பொது போக்குவரத்து, நடப்பது, சைக்கிள் மூலம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்படுத்துவது.
  • இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத் திட்டத்தை செயல்படுத்துவது.

திடக் கழிவு மேலாண்மை – 11 இலக்குகள்

  • கழிவுகளை 100 சதவீதம் தரம் பிரித்து அளிப்பது.
  • கழிவுகள் மறு சுழற்சி செய்யும் வசதிகளை அதிகரிப்பது.

வெள்ள மேலாண்மை – 17 இலக்குகள்

  • வெள்ள தடுப்புக்கு ஏற்ற வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை மேம்படுத்துவது
  • நீர் வள பாதுகாப்பு மேலாண்மை
  • பேரிடர் பாதிப்பு குறைக்கும் திட்டங்களை செயல்படுத்துவது

எளிதில் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் சுகாதாரம் – 12 இலக்குகள்

  • மக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான வீடுகள்
  • காலநிலை மாற்றத்தால் சுகாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/874082-chennai-climate-change-action-plan-report-to-be-released-in-tamil.html