சேகரிப்பு மையத்துக்கு விளை பொருள்களை எடுத்துச் செல்லும் இயந்திரம் வடிவமைப்பு: சென்னை ஐஐடி தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

விளை நிலத்தில் இருந்து அருகில் உள்ள சேகரிப்பு மை விளை பொருள்களை எடுத்துச் செல்வதற்கான இயந்திரத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.

பொது விவசாயிகள் சங்கம் என்னும் அரசு சாரா நிறுவனத்துடன் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் இணைந்து விவசாய நிலத்தில் இருந்து விளைபொருள்களை சேகரிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு அமைப்பை வடிவமைத்துள்ளனா். பொது விவசாயிகள் சங்கத்தின் தலைவரான டி.என்.சிவசுப்பிரமணியனின் நிலம் கரூா் மாவட்டத்தில் உள்ள நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமத்தில் இருக்கிறது. இந்த நிலத்தில் புதிதாக ஒரு இயந்திரத்தை வடிவமைத்து, அதைச் சோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளனா்.

இதுகுறித்து இயந்திரத்தை உருவாக்கிய பேராசிரியா் ஷங்கா் கிருஷ்ணபிள்ளை கூறுகையில், “வரும் காலங்களில் அறுவடைக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள போதிய பணியாளா்கள் கிடைக்காத சூழல் உருவாகும். இதை போக்கவே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம். இரு புறமும் கம்பி வைத்து நிலம் வாயிலாக செல்லும் இந்த அமைப்பு மூலம் எளிதில் விளை பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். அனைத்து இடத்திலும் எளிதாக கிடைக்கும் ஸ்டீல் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடையும் மிகக் குறைவாக இருப்பதால் எளிதில் எடுத்துச் செல்ல முடியும்’ என்றாா்.

இந்த கண்டுபிடிப்பு குறித்து பொது விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என்.சிவ சுப்பிரமணியன் கூறும்போது, “குறிப்பாக ஈர நிலத்தினுள் இறங்காமல் விளையும் பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் என்பதால் விவசாயிகளுக்கு இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi1QZodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvbm92LzAzLyVFMCVBRSU5QSVFMCVBRiU4NyVFMCVBRSU5NSVFMCVBRSVCMCVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRiU4RCVFMCVBRSVBQSVFMCVBRiU4MS0lRTAlQUUlQUUlRTAlQUYlODglRTAlQUUlQUYlRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUYlODEtJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUIzJUUwJUFGJTg4LSVFMCVBRSVBQSVFMCVBRiU4QSVFMCVBRSVCMCVFMCVBRiU4MSVFMCVBRSVCMyVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlOEUlRTAlQUUlOUYlRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUYlODElRTAlQUUlOUElRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJUIyJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU4NyVFMCVBRSVBRiVFMCVBRSVBOCVFMCVBRiU4RCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVCMCVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQjUlRTAlQUUlOUYlRTAlQUUlQkYlRTAlQUUlQjUlRTAlQUUlQUUlRTAlQUYlODglRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUYlODEtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU5MCVFMCVBRSU5MCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlQTQlRTAlQUUlOTUlRTAlQUUlQjUlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtMzk0MjY2OS5odG1s0gEA?oc=5