ரூ.20 லட்சம் பரிசுத் தொகையுடன் சென்னை மாரத்தான் | Chennai Marathon with prize money of Rs.20 lakhs – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாரத்தான் போட்டி வரும் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இம்முறை 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாரத்தானின் 11-வது பதிப்பு 2023-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்ஃபெக்ட் மைலர் (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சமாகும். முதன் முறையாக பார்வைக் குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.

சென்னை மாரத்தானில் கலந்து கொள்வதற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 (நாளை) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க நுழைவு கட்டணம் ரூ.1,250 ஆகும். மற்ற 3 பிரிவுகளுக்கான கட்டணம் ரூ.1,475 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். 4 பிரிவு பந்தயமும் ஜனவரி 8-ம் தேதி காலையில் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கும். இதில் 10 கிலோ மீட்டர் ஓட்டம் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடையும். மற்ற 3 பந்தயங்களும் உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடையும். சென்னை மாரத்தான் போட்டியையொட்டி ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான கண்காட்சி நடைபெற உள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9zcG9ydHMvOTE0MTA2LWNoZW5uYWktbWFyYXRob24td2l0aC1wcml6ZS1tb25leS1vZi1ycy0yMC1sYWtocy5odG1s0gEA?oc=5