சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இம்மாதம் (டிசம்பர்) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, அடுத்த அரையாண்டுக்கு, அதாவது வரும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வரும் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், ஜனவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

சென்னை வாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக ரேஷன் கார்டு நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்கப்படும் பணிமனை, பஸ் நிலையங்கள் விவரம் வருமாறு:-

அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பஸ் நிலையம், மத்திய பணிமனை, சென்டிரல் பஸ் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு.

அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பஸ் நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9zZW5pb3ItY2l0aXplbnMtbGl2aW5nLWluLWNoZW5uYWktd2lsbC1iZS1naXZlbi1mcmVlLWJ1cy10cmF2ZWwtdG9rZW4tZnJvbS0yMXN0LTg2MDE3NdIBggFodHRwczovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29tL2FtcC9OZXdzL1N0YXRlL3Nlbmlvci1jaXRpemVucy1saXZpbmctaW4tY2hlbm5haS13aWxsLWJlLWdpdmVuLWZyZWUtYnVzLXRyYXZlbC10b2tlbi1mcm9tLTIxc3QtODYwMTc1?oc=5