சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

ஆலந்தூர்:

சீனாவில் அதிகரித்து வரும் புதியவகை கொரோனா தொற்று உலகில் பல நாடுகளில் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் நோய்தொற்று பரவலை தடுக்க தற்போது பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

வருகிற 1-ந்தேதி முதல் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 நாடுகளில் இருந்து திரும்பி வரும் இந்திய பயணிகளுக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக பலர் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தனர். கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் காரணமாக பல நாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இதனால் தற்போது வெளிநாடு செல்ல பயணிகளின் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகளை வேறொரு விடுமுறை தினத்திற்கு மாற்றி வருகின்றனர்.

சென்னையில் இருந்து சுற்றுலாவிற்கு மற்ற நாடுகளை காட்டிலும் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு செல்வோர் அதிகமாக இருப்பார்கள். கொரோனா பரவல்-கட்டுப்பாடு காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இது குறித்து பயணிகள் கூறும் போது, பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கும் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயண நேரத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக சுமார் ரூ.3 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டியது உள்ளது. அது மட்டுமின்றி கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அங்குள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் ஓட்டல் செலவும் அதிகரிக்கும். எனவே தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதற்கு பயணிகள் செல்ல தயங்குகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtcGFzc2VuZ2Vycy10b2xsLWRlY3JlYXNlZC1nb2luZy1hYnJvYWQtZnJvbS1jaGVubmFpLTU1NDg0OdIBcGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLXBhc3NlbmdlcnMtdG9sbC1kZWNyZWFzZWQtZ29pbmctYWJyb2FkLWZyb20tY2hlbm5haS01NTQ4NDk?oc=5