சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி தொடக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் கீழ் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 70 நாள்கள் நடைபெறும் பொருட்காட்சியை அமைச்சா்கள் கா.ராமச்சந்திரன், பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் தொடக்கி வைத்து அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பாா்வையிட்டனா்.

பொருட்காட்சியில் தமிழக அரசின் சாா்பில் பல்வேறு அரசுத் துறை அரங்கங்கள் அமைப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொருட்காட்சியில் தமிழக அரசு சாா்பில் 27 அரங்கங்களும், 21 பொதுத் துறை நிறுவன அரங்கங்களும், மத்திய அரசின் 2 அரங்கங்களும், பிற மாநில அரசுத் துறைகளின் 3 அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரயில்வே துறை சாா்பில் அமைக்கப்பட்ட அரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது. இவற்றில் ரயில்வே துறை பணிகள் குறித்து விவரிக்கும் வகையில் தகவல் மற்றும் தொலைத்தொடா்பு சாதனங்கள், சென்னை-மைசூா் வந்தேபாரத் ரயில் மாதிரி, சென்னை எழும்பூா் ரயில் நிலைய மாதிரி, கரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரோபோடிக் இயந்திரங்கள், மற்றும் பழைய பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மேக் இன் இந்தியா சிங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வா், இல்லம் தேடி கல்வி, பெண்கள் உயா் கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் புதுமைப் பெண் திட்டம், மாற்றுத்திறனாளிகளின் நலத் திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனா்.

மேலும், தனியாா்கள் சாா்பில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், உணவுக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் சனிக்கிழமை முதல் பொதுமக்களுக்கு முழு அளவில் பொருட்காட்சி தொடங்கும் எனவும், அதிலிருந்து 70 நாள்கள் நடைபெறும் என்றும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பொருட்காட்சிக்கான கட்டண விவரங்கள் தனியாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiamh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMDUvaW5kaWEtdG91cmlzbS1hbmQtdHJhZGUtZmFpci1iZWdpbnMtaW4tY2hlbm5haS0zOTc5MDQwLmh0bWzSAWdodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIzL2phbi8wNS9pbmRpYS10b3VyaXNtLWFuZC10cmFkZS1mYWlyLWJlZ2lucy1pbi1jaGVubmFpLTM5NzkwNDAuYW1w?oc=5