காணும் பொங்கல்: சென்னை, புறநகரின் சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

மெரீனா, பெசன்ட் நகர், வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா கண்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மாமல்லபுரம், உள்ளிட்ட முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.  

மாநகர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதைத் தவிர முக்கிய இடங்களான மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலை, காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினா், மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரா்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதைத் தவிர மீட்புப் பணிக்காக மோட்டாா் படகுகள், சுமாா் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதையும் படிக்க | அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

உழைப்பாளா் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 15 தற்காலிக காவல் கண்காணிப்பு உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயா் கோபுரத்திலும் 3 போ் கொண்ட காவல் குழுவினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். மேலும் 12 முக்கியமான இடங்களில் அதிதிறன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மெரீனா கடற்கரை மணற்பரப்பில் புதிதாக சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் நவீன காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் மையங்களில் பொது மக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 2 டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பட்டு வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikQFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzE3L2thbnVtLXBvbmdhbC1zcGVjaWFsLWJ1c2VzLXJ1bi10by10b3VyaXN0LXNwb3RzLWluLWNoZW5uYWktMzk4NTI2MC5odG1s0gGOAWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzE3L2thbnVtLXBvbmdhbC1zcGVjaWFsLWJ1c2VzLXJ1bi10by10b3VyaXN0LXNwb3RzLWluLWNoZW5uYWktMzk4NTI2MC5hbXA?oc=5