மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து கிராமங்களிலும், சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்வதால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக்கோரி, அந்த ஓடைக்கு அருகில் நிலம் வைத்துள்ள கலைச்செல்வி, மாலா ராஜாராம் ஆகியோர் சார்பில் பொது அதிகாரம் படைத்த நபரான கோகுல கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க, தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான இடத்தை மயானத்திற்காக மடூர் கிராமத்தில் உரிய இடத்தை கண்டறிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் இந்த பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வார்த்தில் விசாரணை கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வார்த்தில் விசாரணை

விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் வலியுறுத்தியுள்ளார். மத சாதி சகிப்புத்தன்மை, பரஸ்பரம் மரியாதை, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.

English summary
The Chennai High Court has ordered the Tamil Nadu government to remove caste name plates in cemeteries and set up common cemeteries in all villages, irrespective of caste.

Source: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-high-court-ordered-the-tamil-nadu-government-to-remove-caste-name-plates-in-cemeteries-441614.html