அடேங்கப்பா.. சென்னை நிறுவனத்தில் ரூ.400 கோடி வருமான வரி மோசடி.. ரகசிய சர்வர் வைத்திருந்தது அம்பலம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை சேர்ந்த ஒரு தொழில் நிறுவனத்தில், வருமானவரித்துறை நடத்தி வந்த சோதனை நிறைவடைந்துள்ளது. அங்கு 400 கோடி ரூபாய் மதிப்புக்கு கணக்கில் காட்டாத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது.

காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகள் மற்றும் நிதி சேவைகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடத்தக்கூடிய நிறுவனம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், கடந்த 4 நாட்களாக நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்று அந்த சோதனை முடிவடைந்த நிலையில் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் மற்றொரு முக்கியமான விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு சொந்தமான நெட்வொர்க் சர்வர் தவிர ரகசியமாக ஒரு சர்வர் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது இந்த சோதனையில் தெரியவந்துள்ளது. இதில் கணக்கு வழக்குகள், வெளியில் சொல்லாத, அதாவது கணக்கில் வராத பணம் பரிமாற்றம் தொடர்பான விவரங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இதை வருமானவரித்துறையினர் கையும் களவுமாக கண்டுபிடித்துள்ளனர்.

பல்வேறு கணக்குகள் தொடர்பான பென்டிரைவ்கள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆவணங்கள் தவிர்த்து, ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணமும் இந்த சோதனையில் பிடிபட்டுள்ளது என்று வருமான வரித்துறை, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/searches-unravel-rs-400-crore-unaccounted-income-in-chennai-378421.html