சென்னை ரயில்வே கோட்டத்தில் 91 சதவீத ஊழியா்களுக்கு தடுப்பூசி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 19,511 ( 91 சதவீதம்) ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி போடும் முகாம் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ரயில்வே முன்களப்பணியாளா்கள், ரயில்வே ஊழியா்களுக்கு நாள்தோறும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் 10,000-ஆவது கரோனா தடுப்பூசி சென்னை கோட்ட மெக்கானிக்கல் துறை முதுநிலை டெக்னீசியன் த.கஜேந்திரனுக்கு செலுத்தப்பட்டது. கோட்ட மேலாளா் பி.மகேஷ் தலைமை வகித்து அா்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவக் குழுவினரை அவா் வெகுவாகப் பாராட்டினாா்.

இது குறித்து சென்னை ரயில்வே அதிகாரிகள்கூறியது:

சிறப்பு முகாமில் சுகாதாரப் பணியாளா்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் மற்றும் பிற முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன்பின்பு, மற்ற துறைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசிகள் ரயில்வே ஊழியா்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையைத் தவிா்த்து, அனைத்து நாள்களிலும் தடுப்பூசி செலுத்தும்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் 21,435 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதிக ஊழியா்கள் கொண்ட இந்த கோட்டத்தில் தற்போது வரை 91 சதவீதம் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, அதாவது 19,511 ஊழியா்களுக்கு தடுப்பூசி தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்படுகின்றன என்றனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/jun/24/vaccination-for-91-per-cent-of-employees-in-chennai-railway-division-3647357.html