இப்போதும் சென்னை பாதுகாப்பான மாநகரம்தான்: புள்ளிவிவரம் சொல்லும் உண்மை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

’நல்லா இருக்கீங்களா?’ என்று எவரேனும் கேட்டால், ‘நல்லா இருக்கேன்’ என்று சும்மாப் பேச்சுக்குச் சொல்லுவோம். ’பையனுக்கு நல்ல வேலை கிடைக்கலப்பா’ என்பதற்கு ‘கிடைச்சிரும், கவலைப்படாதே’ என்றும் ‘பொண்ணுக்கு நல்ல வரன் அமையாம தள்ளிப்போயிக்கிட்டே இருக்கு’ என்று உறவோ நட்போ சொல்லும்போது, ‘கவலையேபடாதே… சீக்கிரம் நல்ல வரன் அமைஞ்சு, ஜாம்ஜாம்னு கல்யாணம் நடக்கும் பாரு’ என்றும் சொல்பவை ஒரு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக சொல்லப்படும் சம்பிரதாய வார்த்தைகளைச் சொல்லுவோம். கஷ்டங்கள், கவலைகள், ஏக்கங்கள், துக்கங்கள் என்றிருந்தாலும் அதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டுத்தான் ‘நல்லா இருக்கேன்’ என்ற பதிலைச் சொல்கிறோம். ஆனால், இந்தக் கட்டுரை சம்பிரதாயத்துக்கான கட்டுரை அல்ல. சும்மாவேனும் ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதற்காகவோ ஆறுதலுக்காகவோ எழுதப்படும் கட்டுரை அல்ல. உண்மையிலேயே, பயப்படும்படியான பதறும்படியான சூழலில் சென்னை மாநகரம் இல்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்தக் கட்டுரை.

கரோனாவின் அச்சுறுத்தலால், சென்னையில் வாழ்ந்து வந்த எத்தனையோபேர், சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த ஊரடங்கில்… சென்னையில் கரோனாவின் தாக்குதல்களுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்ததுதான். ஆனால் சென்னையில் வசிப்பவர்களின் வீடுகளில் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து, தன்னைப் பரப்பிக்கொள்ளவில்லை கரோனா என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்குப் போனவர்களை விமர்சித்து ஒருசிலர் எழுதினார்கள். சென்னையை ‘யூஸ் அண்ட் த்ரோ’வாகப் பார்க்கிறீர்களா என்று சிலர் எழுதினார்கள். சென்னையைத் திட்டி எழுதினார்கள். கொண்டாடி எழுதினார்கள். ஆனால், எந்தச் சலனமும் இல்லாமல், எப்போதும் போலவே இருக்கிறது சென்னை மாநகரம்.

சில ஊர்களில், ‘சென்னையில் இருந்து வருபவர்களை உள்ளே விடாதீர்கள்’ என்று முரசு அறிவித்த அவலமும் நடந்தது. அதுவரை எந்த ஊருக்கும் வராத கரோனா, இப்படி சென்னையில் இருந்து வருபவர்களால் மட்டுமே கரோனா அழைத்துவரப்படுவதாக ஒரு பிம்பத்தை வளர்த்துக் கொண்டு பார்த்த சமூகத்தைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஊரடங்கை முழுமையாக நாம் கடைப்பிடித்தால், எந்த ஊராக இருந்தாலும் கரோனாவின் ‘பப்பு’வேகாது என்பதை நாம் இன்னும் புரிந்துகொள்ளவே இல்லை. ‘கெட்டும் பட்டணம் போ’ என்று சொல்லிவைத்த காலமெல்லாம் உண்டு. ‘பட்டணம் போனான் பொழைச்சுக்கிட்டான்’ என்று பெருமிதமாகப் பேசியதெல்லாம் நடந்திருக்கிறது. இன்றைக்கு பட்டணத்தில் இருந்தால், பொழைக்கமுடியாது என்றும் கரோனா தாக்கிவிடும் என்றுமாக பரவலாக எல்லா ஊர்க்காரர்களும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் சென்னை பாதுகாப்பான மாநகரம்தான்: புள்ளிவிவரம் சொல்லும் உண்மை

உண்மையில் எல்லா ஊரைப் போலவும்தான் சென்னையும். ஐந்து ஊர் சேர்ந்ததுதான் ஒரு சென்னையின் நீள அகலம். மக்கள்தொகையும் அப்படித்தான். கரோனா விஷயமும் அவ்விதம்தான்.
உண்மையில் நம் காதில் விழும் செய்தியின் ஒருபகுதியை மட்டும் எடுத்துக் கொண்டே விமர்சிக்கச் சென்றுவிடுகிறோம். கரோனா வைரஸ் தாக்கியவர்களின் பட்டியலைப் பார்க்கிறோம். ‘ஹய்யோ… ஒரேநாள்ல இவ்ளோ பேருக்கு கரோனா வைரஸா?’ என்று போனைப் போட்டு நண்பர்களிடம் விமர்சிக்கக் கிளம்பிவிடுகிறோம். ‘பாத்தீங்களா, சென்னைல… ஒரேநாள்ல… எவ்ளோ பேருக்கு கரோனா… பாத்தீங்களா?’ என்று ‘பொரணி’ பேசுகிறோம். அதற்கு அடுத்த வரியில் சொல்லப்படுகிற, எழுதப்படுகிற புள்ளிவிவரச் சேதியை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

கரோனாவால் பாதித்தவர்களின் பட்டியல் உண்டு. ஏன்… இறந்தவர்களின் சதவிகிதம் கூட இருக்கிறது. முக்கியமாக, கரோனாவில் இருந்து குணமானவர்களின் பட்டியலையும் சதவிகிதத்தையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் ஊரடங்கு போலவே இந்த உண்மை நிலவரத்தையும் ‘அசால்ட்டாக’ டீல் செய்கிறோம்.

சென்னை மாநகராட்சியில், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 38 சதவிகிதம் பேர். இறந்தவர்களின் சதவிகிதம் 1.52 சதவிகிதம் பேர். பெருநகர சென்னையில், இதுவரை 60.48 சதவிகிதம் பேர் குணமடைந்திருக்கிறார்கள் என புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையின் பல ஏரியாக்கள் நெருக்கடியடித்துக் கொண்டிருக்கிற பகுதிகள். சின்னச் சின்னத் தெருக்களும் அந்தத் தெருக்களுக்குள் குட்டிகுட்டியாய் ஏராளமான வீடுகளும் என இருக்கும் ஏரியாக்கள் அதிகம். ராயபுரம் மாதிரியான ஏரியாக்கள் அப்படித்தான் இருக்கின்றன. ராயபுரம் என்றில்லாமல், சென்னைக்கு இந்தப் பக்கமுள்ளவை ஒருவிதமாகவும் அந்தப் பக்கம் இருப்பவை ஒருவிதமாகவும் விசாலமாகவும் நெருக்கியடித்துக் கொண்டிருப்பதும் என இரண்டுவிதமாகவும் இருக்கின்றன. கசகசவென இருக்கிற சின்னஞ்சிறிய தெருக்களும் சின்னச்சின்னதாக நெருக்கடியடித்துக்கொண்டிருக்கிற வீடுகளுமாகக் கொண்ட ஏரியாக்களையும் அங்கே பரவும் கரோனா எண்ணிக்கையையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சென்னையைப் பார்த்து பயப்படுவதும் பதட்டமாவதும் எப்படி சரியாக இருக்கும்?

எல்லா ஊர்களிலும் கரோனா பரவியபடிதான் இருக்கிறது. அப்படிய பரவிய பகுதிகளைப் பார்த்தால், அங்கேயும் இப்படி நெரிசல் மிக்க சந்துபொந்துகளும் நெருக்கியடித்துக் கொண்டிருக்கிற வீடுகளும் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தின் அந்த ஊர்களோ அந்த ஊரின் கட்டமைப்போ நமக்குத் தெரியாது.
தவிர, எதிர்காலம் நிமித்தமாக, அரசியல் ரீதியாக, கலை முதலான தொடர்புகள் சம்பந்தமாக, அரசு சம்பந்தப்பட்ட விஷயமாக… என சென்னைக்கும் தமிழக மக்களுக்கும் அப்படியொரு பந்தம் பின்னிப்பிணைந்திருக்கிறது. அதனால்தான் சென்னையைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். என்ன… தவறாகப் புரிந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம்.

பயப்படும்படியான, பதட்டப்படும்படியான, அச்சத்துடன் பார்க்கவேண்டிய ஊராக சென்னை இல்லை என்பதே உண்மை. சென்னை என்றில்லை… எந்த ஊரையும் அப்படிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. பயப்பட வேண்டிய எண்ணம் தேவையில்லை.

ஊரடங்கு என்பதையும் சமூக இடைவெளியும் புரிந்து உணர்ந்து சென்னை செயல்படுமா என்ன? சென்னை மக்கள்தான் செயல்பட வேண்டும். எல்லா ஊரிலும் எல்லா மக்களும்தான் செயல்படவேண்டும்.
கரோனாவை நினைத்து பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. அந்த பயத்தை அடுத்து, கரோனா தாக்கத்தை அறிந்து, மீண்டவர்களின் எண்ணிக்கையைப் புரிந்து, உணர்ந்து, தெளிவதில்தான் நம் நாளைய வாழ்க்கை இருக்கிறது.

’வணக்கம் வாழவைக்கும் சென்னை’ என்று மீண்டும் வரத்தானே போகிறோம் சென்னைக்கு. மீண்டு வரத்தான் செய்யும் சென்னை!

அன்பு வாசகர்களே….

இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Source: https://www.hindutamil.in/news/blogs/561571-chennai-carona.html