எப்போதும் சென்னை பாதுகாப்பான மாநகரம்தான்: புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

கரோனா அச்சுறுத்தலால் சென்னையில் வசித்து வந்த எத்தனையோ பேர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். வந்தாரை வாழவைக்கும் சென்னை, வாய்ப்புகளின் தலைநகரம், பிழைக்க முடியாதவர்களின் நன்னம்பிக்கை முனை என்றெல்லாம் சொல்லப்பட்டு வந்த சென்னை இன்று வாழத் தகுதியற்ற நகரமாக, பாதுகாப்பற்ற நகரமாக சிலரால் விமர்சிக்கப்படுகிறது.

உண்மையில் சென்னை பாதுகாப்பற்ற நகரமா?

இப்படி சிலரால் விமர்சிக்கப்படுவதற்கான அல்லது நினைப்பதற்கான முதல் காரணம் தினம் தினம் வெளியாகும் கரோனா நிலவரம் குறித்த பட்டியல். அதில் கரோனா வைரஸ் பாதிப்புகளைப் பார்த்துப் பதற்றமடைகிற நாம் குணமடைபவர்களின் பட்டியலை மட்டும் கண்டுகொள்வதில்லை அல்லது கவனிப்பதில்லை. இதனால்தான் இன்னும் பீதி அதிகரிக்கிறது.

இந்நிலையில் இதுவரைக்கும் வந்த புள்ளிவிவரங்களை நாம் மறுவாசிப்புக்கு உட்படுத்துவோம்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 பேராக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 58.56 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக உள்ளது.

இந்தியாவில் அதிக தொற்றுப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 133 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,188 பேராக அதிகரித்துள்ளது. 49,301 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 78,335 -ல் சென்னையில் மட்டும் 51,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் உயிரிழப்பு 1000-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்த 1,025 பேரில் சென்னையில் மட்டுமே 776 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையின் மொத்த எண்ணிக்கையான 51,699 -ல் 776 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.5% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.3% ஆக உள்ளது.

இந்த நிலையில் சென்னை வாழத் தகுதியற்ற நகரம், பாதுகாப்பான நகரம் அல்ல என்று சொல்வது அதீதமானது. அர்த்தமற்றது. அறியாமை மிக்கது. உண்மையில் இப்போதும் சென்னை பாதுகாப்பான நகரம்தான் என்பதை சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

இன்றைய தினம் 28-06-2020 அன்று சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை இதோ :

சென்னையில் இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் : 51, 699 பேர்

இன்று வரை குணமடைந்தவர்கள் : 31, 045 பேர். அதாவது இதுநாள் வரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.48 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் :19, 877 பேர்

அதாவது மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களில் தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளோர் 38 சதவீதம்.

இறந்தவர்கள் எண்ணிக்கை : 776 பேர். இது பாதிக்கப்பட்டோரில் 1.52 சதவீதம்.

ராயபுரம் மண்டலத்தில் 7 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 6 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரம் சொல்கிறது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 36 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் சென்னை ஏன் அதிக பாதிப்புக்குள்ளாகிறது?

தமிழகத்தின் மக்கள்தொகையில் சென்னையின் மக்கள்தொகை 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் என்பது எண்ணிக்கையை மையமாகக் கொண்ட ஒப்பீட்டளவில் ஏற்புடையதே. நெருக்கமான வீடுகள், குறைந்த இடைவெளியுடன் கூடிய குடிசைப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளாக இருப்பதால் நோய்ப் பரவலுக்கான வாய்ப்புகள் அங்கு அதிகம் உள்ளன. முகக்கவசம் அணிவது, கை கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சத்தான உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை அங்கு தீவிரமாகப் பின்பற்றப்படாததும் முக்கியக் காரணம்.

சென்னை மட்டும் ஏன் பேசுபொருளாகிறது?

தலைநகரம் என்பதாலும் அரசியல், வேலைவாய்ப்பு, கலை, இலக்கியம், சினிமா, தொழில் என அனைத்தும் நீக்கமற நிறைந்திருப்பது இங்குதான். அதனால்தான் சென்னை பேசுபொருளாகிறது. அதனாலேயே சென்னை முழுவதும் கரோனா பாதித்த மாநகரமாகிவிடாது.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 9 ஆயிரத்து 509 தெருக்களில் மட்டும்தான் தொற்று உள்ளது. இதில் 812 தெருக்களில் மட்டுமே 5-க்கும் மேற்பட்ட தொற்று உள்ளது. குடிசைப் பகுதிகளில் தொற்று எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துவதால் இன்னும் குடிசைப் பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

வீடு வீடாகக் கணக்கெடுப்பு, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள், அதிக அளவிலான பரிசோதனைகள், உயிர்காக்கும் ஊசி மருந்துகள் கொள்முதல் ஆகிய அரசின் நடவடிக்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து குணமடையச் செய்யும் என்று நம்பலாம்.

சுனாமி, 2012 மழை வெள்ளம் என்று எத்தனையோ பாதிப்புகளை, பேரிடர்களை சென்னை சந்தித்துள்ளது. அதிலிருந்து மீண்டு மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது. கரோனாவையும் கடந்து சென்னை பாதுகாப்பான நகரமாக, மக்களின் வருங்காலத்தை வடிவமைக்கும் வலிமையைக் கொடுக்கும்.

நாளைய வாழ்வின் நம்பிக்கைப் பாதையில் பயணிக்க அலட்சியம் இல்லாமல் அக்கறையுடன் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிவது, சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தினால் நம்மைத் துரத்தும் கரோனா வைரஸை நாம் துரத்தியடிக்க முடியும்!

Source: https://www.hindutamil.in/news/blogs/561594-chennai-has-always-been-the-safest-metropolis-statistics-tell-the-truth.html