கல்லூரிகளை மருத்துவமனையாக மாற்றக் கோரிய வழக்கு – 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை தற்காலிக மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தல் வார்டுகளாகவும் மாற்றக் கோரிய மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, பல தனிமைப்படுத்தல் பிரிவுகளை அமைத்து வருகிறது. ரயில் பெட்டிகளை கொரோனா தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன.

கபசுர குடிநீர் வழங்குவதில் அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை ஐகோர்ட்

மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் மட்டும் போதுமானதல்ல என்பதால், அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை தற்காலிக மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்தல் வார்டுகளாகவும் மாற்றவும், அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சாலையோரம் வசிப்பவர்களையும் அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தன் மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, புலம் பெயர்ந்து வந்த வெளி மாநில தொழிலாளர்களும், வசிக்க இடம் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநாதைகளாக கைவிடப்பட்ட முதியவர்கள் பசிப் பிணி தாக்கி மயங்கிக் கிடக்கின்றனர். இது மிகவும் பரிதாபமாக இருந்ததாகவும் மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ‘சமூகப் பரவல்’ இல்லை – ஆறுதல் அளித்த பீலா ராஜேஷ் பிரஸ் மீட்

தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. இவற்றை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம், 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த முடியும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சொந்தமானவை என்பதால் சமூக பொறுப்புடன், அவற்றை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற ஒப்புக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை வீடியோ கால் மூலம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/private-colleges-converting-as-hospitals-case-madras-high-court-tn-govt/