முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.1 லட்சம் வழங்கிய சென்னை நிருபர்கள் சங்கம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் (சென்னை நிருபர்கள் சங்கம்) கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

இதுபற்றி தமிழக முதல்வருக்கு சென்னை நிருபர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையே, சிரமமான சூழ்நிலைகளில், பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கியுள்ளீர்கள். இதற்காக, உங்கள் முயற்சிகளை, நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் கேமரா மேன்களின் தொழில்முறை அமைப்பான மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட், பாராட்டுகிறது.

உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது என்றாலும், அதற்கு பதிலாக மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சில உதவிகளை செய்து தர மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் உங்களை கேட்டுக்கொள்கிறது

1) முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை இடைக்கால நடவடிக்கையாக வழங்குதல்

2) முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், ஊடகவியலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இணைப்பது போன்றவற்றின் மூலம், அவர்களுக்கு தேவைப்படும் சுகாதார உதவி கிடைக்கும்.

விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ .72,000 க்கும் குறைவானவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளதால், இது தொடர்பான எங்களின் முந்தைய முயற்சிகளை மேலும் தொடர முடியவில்லை. பத்திரிகையாளர்களின் ஆண்டு வருமானம் ரூ .72,000 க்கு மேல் இருப்பதால், இந்தத் திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களைச் சேர்ப்பதில் வருமான உச்சவரம்பை முழுவதுமாக அகற்ற அரசு சிறப்பு அரசாணை பிறப்பிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இறப்பு மற்றும் ஓய்வூதிய பயன் வழங்குவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்ட அரசாணை போல வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-reporters-guild-contribution-of-rs-one-lakh-to-cm-relief-fund-381890.html