சென்னையில் கொரோனா: எங்கெல்லாம் பாதிப்பு? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னையில் மட்டும் 228 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பாதிப்பு என்கிற விவரம் குறித்த தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகரில் 33 பேரும், கோடம்பாக்கத்தில் 26 பேரும், அண்ணாநகரில் 24 பேரும், தண்டையார்பேட்டையில் 20 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல் தேனாம்பேட்டையில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடையாறு, பெருங்குடி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவெற்றியூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாதவரம் ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் தலா மூன்று பேரும், சோழிங்கநல்லூரில் இரண்டு பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் இதுவரை பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை.

கொரோனா: தமிழகத்தின் தற்போதைய நிலவரம் இதுதான்!

பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. பல பகுதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீல் வைத்துள்ளனர்.

சென்னை நிலவரம்

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைரஸ் நோய் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நடமாடும் மாதிரி சேகரிப்பு மையத்தை ஆணையாளர் கோ. பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.

ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின்னர் ஊரகப் பகுதிகளில் பாதிப்பு குறைவான இடங்களில் சில தளர்வுகள் இருக்கும் என அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை ஹாட் ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியளவில் தளர்வு இருக்காது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தொழிற்சாலைகள அதிகமுள்ள மணலி, அம்பத்தூர் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத நிலையில் அங்கு சில தொழிற்சாலைகள் திறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/zone-wise-breakup-of-covid-19-positive-cases-in-chennai/articleshow/75216166.cms