கொரோனாவை மறைத்து சுயசிகிச்சையில் மக்கள்: மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் உள்ள அனைத்து மருந்தகங்களும், பாராசிட்டமால் மற்றும் அன்டிபயோடிக் மருந்துகளை வாங்கிச் செல்வோர்களின் விவரங்களை அனுப்புமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக தமிழகத்தில் கடும் பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், தற்போது தொற்றின் பரவல்  சற்று குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உட்பட 11 மாவட்டங்களில் மட்டுமே தற்போது அதிகளவு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

தற்போது,2.57 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ள நிலையில்,  26 ஆயிரத்து  571 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகிவந்த நிலையில், தற்போது 20 ஆயிரமாக குறைந்துள்ளது.

தொற்று பரவல் அதிகமாக இருந்தபோது மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததால், பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்துக்கொண்டு சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான பலரும் இது குறித்த தகவலை அரசுக்கு தெரியப்படுத்தாமல் தாங்களாகவே மருத்துவமனைகளில் மருந்துகளை பெற்று சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, சென்னையில்,  காய்ச்சலுக்கான பாரசிட்டமால் மற்றும் அன்டிபயோடிக் மாத்திரைகள் வாங்கி செல்பவர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  அதன்படி, இந்த  மருந்துகளை பெற்று செல்லும் நபர்களின் முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை அனுப்பி வைக்கும்படி மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மேலும் படிக்க.. சார்ஜ் போட்டபடி பேச்சு: செல்போன் வெடித்து +2 மாணவன் உயிரிழப்பு…

வாடிக்கையாளர்கள் வாங்கும் மருந்து விவரங்கள் குறித்து மாநகராட்சியிடம் கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி தகவல் தெரிவிக்காத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

கொரோனா தொற்றின் முதல் அலையின்போது பாரசிட்டமால் போன்ற மாத்திரைகளை பொதுமக்கள் அவர்களாகவே வாங்கி பயன்படுத்த தொடங்கியதால்,  மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை வழங்க மருந்தகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-corporation-asks-medical-shops-to-provide-details-of-customers-mur-477449.html