கொரோனா: சென்னை, கோவை, திருப்பூரில் அதிகரிக்கும் எண்ணிக்கை..! இன்றைய நிலவரம் அறிவோம் – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. 27 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்கள் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் தொற்று நோய் கட்டுக்குள் வரும் எனக் கூறப்பட்டாலும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து உடனுக்குடன் இந்த இணைப்பில் பார்க்கலாம்.

LIVE UPDATE

* ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜோமாட்டோ, டன்ஜோ நிறுவனங்க மூலம் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வாடிக்கையாளரின் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

* தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு.

மாவட்ட வாரியாக விவரம்:

மாவட்ட வாரியாக விவரம்

* சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல். சேலம் மற்றும் திருப்பூரில், ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 28ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு செயல்படுத்தப்படும். அந்த காலகட்டத்தில் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

* இதர மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33% பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM Center) வழக்கம் போல் செயல்படும்.

* மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், காவல், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை, மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், குடிநீர் வழங்கல் துறைகளும் தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும்.

* கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 5 மாநகராட்சிகளில் இரண்டு முறை கிருமி நாசிகள் தெளிக்கப்படும். ஐடி பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் – முதல்வர்

* மாநில அரசின் நடவடிக்கைகள், ஊரடங்கு எப்படி நடை முறைப்படுத்தப்படுகிறது போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குழு சென்னைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

* சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகரில் வரும் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அம்மா உணவகங்கள், ஏடிஎம் போன்றவை வழக்கம்போல செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அன்று மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

*மதுரையில் அத்தியாவசியப் பணிகளுக்கு வெளியே செல்பவர்கள் க்யூ ஆர் கோடுடன் உள்ள அனுமதிக் கடிதத்தைப் பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனால் இதைப் பெறுவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில் தனி மனித இடைவெளி கேள்விக்குள்ளானது. இந்நிலையில் க்யூ ஆர் கோடு தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

*கொரோனா தடுப்புப் பணியில் அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அரசு முன்கூட்டியே செயல்பட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் புதைக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

*கோவையில் இணைய செய்தி நிறுவனர், ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

*சேலத்தில் அடுத்த இரு நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். காய்கறிச் சந்தைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத் துறை, தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

*புதுக்கோட்டையில் நிஜாம் பாக்கு தொழிற்சாலை ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வந்ததால் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

*சென்னை அண்ணா சாலையில் கடந்த சில நாள்களாக வழக்கம் போல் வாகனங்கள் இயங்கிவந்தன. இந்நிலையில் இதைக் கட்டுப்படுத்தும் வகையில் அண்ணா சாலை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வரும் வாகனங்கள் பிற சாலைகள் வழியே திருப்பிவிடப்பட்டுள்ளன.

*கொரோனா நிதியாக யார் அதிக பணம் கொடுத்தது என விஜய், ரஜினி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் விஜய் ரசிகர், ரஜினி ரசிகரால் கொல்லப்பட்டார். மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரஜினி ரசிகரான தினேஷ் பாபுவை கைது செய்தது.

*சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திரா மகிளா சபா மருத்துவமனையில் பணியாற்றிய இரு மருத்துவர்கள், ஒரு செவிலியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

*மதுரையில் 70 வயது மூதாட்டி கொரோனாவால் நள்ளிரவில் உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

*தமிழ்நாட்டில் நேற்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக இருக்கிறது.

*நேற்று மட்டும் 6 ஆயிரத்து 954 பேரின் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. இதுவரை 65 ஆயிரத்து 977 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

*11 தனியார் ஆய்வகங்கள் உட்பட மொத்தம் 34 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.

*நேற்று 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 908ஆக உள்ளது.

*கொரோனாவால் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. கோவையில் 134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-coronavirus-death-cases-updates-across-dharmapuri-madurai-coimbatore-live-updates/articleshow/75338662.cms