சென்னை: கொரோனாவால் இன்று மூவர் பலி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேற்று (மே 7) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சென்னையில் பாதிப்பு அதிகரித்தாலும், உயிரிழப்பு குறைவாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் கட்டுக்குள் இருப்பதாக கூறினார்.

மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அச்செய்தி இருந்தது. ஆனால் இன்று அதிகாலையிலேயே அதிர்ச்சிகரமாக சென்னையில் மட்டும் மூவர் பலியான செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை சூளைமேட்டில் வசித்த 56 வயது நபர் கோயம்பேடு சென்று வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல் அந்தப் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கொரோனா: தமிழ்நாடு எந்த நிலையை அடைந்துள்ளது?

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தாம்பரத்தைச் சேர்ந்த 76 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்று காலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது?

கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மட்டுமல்லாமல் வட மாவட்டங்கள் முழுவதும் தினம் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவது உறுதியாகிவருகிறது. இந்நிலையில் கோயம்பேடு மூலம் தொற்று ஏற்பட்டவர்களில் ஒருவர் பலியாகியிருப்பது இது முதல் முறையாகும்.

தமிழ்நாட்டில் நேற்று இருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் எண்ணிக்கை 37ஆக அதிகரித்தது. இன்று மேலும் மூவர் உயிரிழந்த நிலையில் 40ஆக உயர்ந்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/three-people-died-today-morning-may-8th-in-chennai-due-to-covid-19/articleshow/75616007.cms