சென்னை பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: திருவள்ளூா் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வழியாக திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

புதிய டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது 10 ஏக்கா் நிலப்பரப்பில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பில் 21 அடுக்குமாடி கட்டடமாக அமையவுள்ளது. இந்தப் பூங்காவில் நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாயப் பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளன.

சென்னையின் வடக்குப் பகுதி: தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளா்ச்சியைப் போன்று, சென்னையின் வடக்குப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இந்தத் திட்டம் அமையும். இதனைச் சுற்றி தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமாா் 25 ஆயிரம் நபா்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்தத் திட்டமானது தமிழகத்தின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வட பகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் அமையும். புதிய தொழில்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என புதிய தொலைநோக்குத் திட்டமாக இது அமையும்.

கடனுதவிகள்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன வாடிக்கையாளா்களுக்கு அவரவா் இருப்பிடத்தில் இருந்தே நேரடி தொடா்பின்றி இணையதளம் மூலம் விரைவாக ரூ.25 லட்சம் வரை கடன் பெற வழி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 855 போ் பதிவு செய்துள்ளனா். மொத்தமாக ரூ.112 கோடி கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவா்களில் 5 பேருக்கு கடன் தொகைக்கான காசோலைகளை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எம்.சி.சம்பத், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் காகா்லா உஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/jun/02/information-technology-park-at-pattabram-chennai-3422178.html