அத்தியாவசியமற்ற வங்கிச் சேவைகளை நிறுத்தவேண்டும் – சென்னை மாநகராட்சி வேண்டுகோள் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Greater Chennai corporation : வங்கிகளில் அத்தியாவசியம் இல்லாத சிறிய அளவிலான பணத்தை எடுத்தல், வங்கி அட்டைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளோம்….

சென்னையில் உள்ள 1500க்கும் மேற்பட்ட வங்கிகளில் அத்தியாவசியம் இல்லாத சேவைகளை நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

[embedded content]

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் விளக்கம் அளித்தார்.

அதில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள வீடுகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க், மருத்துவக் கழிவுகளை சேகரிக்க பயோ மெடிக்கல் வேஸ்ட் சேகரிக்கும் கவர் வீடு ஒன்றுக்கு 5 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 5-6 டன் வரையிலான மருத்துவக்கழிவுகள் சென்னையில் சேகரிக்கப்படுகிறது. பொதுமுடக்கம் காரணமாக 90% மக்கள் வீட்டில் இருந்ததால் 19 ஆம் தேதிக்கு பிறகு 10000 டெஸ்ட்கள் என்ற எண்ணிக்கை உயர்ந்தது. வீடுகளுக்கு சோதனைக்காக வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு மருத்துவர், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு சென்னையில் ஒவ்வொரு நாளும் 500-550 வரையிலான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். சென்னையில் உள்ள 1500க்கும் மேற்பட்ட வங்கிகளில் அத்தியாவசியம் இல்லாத சிறிய அளவிலான பணத்தை எடுத்தல், வங்கி அட்டைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியுள்ளோம். இதன் மூலம் 80% கூட்டத்தை வங்கிகளில் தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-tamil-nadu-chennai-greater-chennai-corporation-bank-services-commissioner-prakash-206468/