அவங்கள ஸ்ட்ரிக்ட்டா வாட்ச் பண்ணுங்க… சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ‘செக்’ !! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பொதுமக்கள் பயணிக்க கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.

முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள், அவசர மருத்துவ தேவைகள், மரணம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. தமிழக அரசின் இந்த நடைமுறை கடுமையாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இந்த நடைமுறை எளிமையாக்கப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் தற்போது இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், வேலைத் தேடி மீண்டும் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கவுள்ளனர். இ-பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்ட முதல் நாளிலேயே (ஆகஸ்ட் 17) லட்சக்கணக்கானோர் சென்னைக்கு திரும்பியுள்ளதால். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, கோவையில் இன்றைய கொரோனா விவரம்..!

இதனையடுத்து, சென்னையில் தற்போது கொஞ்சம் கட்டுக்குள் உள்ள கொரோனா மீண்டும் அதிகரித்துவிடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்தது அனைவருக்கும் இ பாஸ்: வேறு என்ன சிக்கல்?

இதையடுத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறை தான் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பின்பற்றப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் அப்படியே தொடரும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/tn-government-advice-to-chennai-corporation-to-watch-people-strictly-who-enters-into-chennai/articleshow/77635277.cms