சென்னையில் கரோனா பாதிப்பு: மண்டல வாரியாக விவரம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 13,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் 10,000-க்கும் கீழ் குறைந்த நிலையில், தற்போது 13,000-யைத் தாண்டியுள்ளது. 

சென்னையில் இதுவரை 1,84,429 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,441 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,67,284 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 13,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் 1,195 பேரும், அண்ணா நகரில் 1,332 பேரும், அடையாறில் 1,043 பேரும், திருவிக நகரில் 1,119 பேரும், தேனாம்பேட்டையில் 1,207 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/oct/14/chennai-corona-update-3484814.html