சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது! – Vikatan

சென்னைச் செய்திகள்

நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தது. அதன் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன்

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும், இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்தநிலையில், சென்னையை அடுத்த ஆவடியிலிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: https://www.vikatan.com/news/crime/retried-judge-karnan-arrested-in-chennai