தமிழகம் வரும் போது வருண பகவானின் பார்க்கிங் ஏரியாவாக மாறிய சென்னை.. என்ன காரணம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகம் வரும் போது வருண பகவானின் பார்க்கிங் ஏரியாவாக சென்னை நீண்ட காலமாக இருக்கிறது. இதற்கு காரணம் ஏரி உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்டியது தான்.

ஏரிகள் மட்டுமல்ல, தண்ணீர் தேங்கும் பகுதிகள், தண்ணீர் செல்லும் பாதைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியது தான். தண்ணீரின் பாதைய ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் அருகில் உள்ள பகுதிகளும் நீரில் தத்தளிக்கும் நிலை ஏற்படுகிறது

மற்ற ஊர்களில்எவ்வளவு மழை விழுந்தாலும், வெள்ளக்காடாக மாறினாலும், அடுத்த ஒரு நாளில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உதாரணத்திற்கு புதுச்சேரியில் தான் நிவர் புயல் கரையை கடந்தது. ஆனால் அங்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வெள்ளம் வடிந்து வழக்கம் போல் மாறிவிட்டது.

பக்கத்திலேயே ஏர்போர்ட்

ஆனால் சென்னையில் அதே நிவர்புயல் கரையை கடந்திருந்தால் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். காரணம், இங்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தான். விலைகுறைவு, பக்கத்திலேயே ஏர்போர்ட் கூப்பிடும் தூரத்தில் தாம்பரம், ஒடிவாங்க, இந்த ஏரியாவில் 10 அடி தோண்டினாலோ நல்ல தண்ணீர் வரும் என்று ஆசைவார்த்தை விளம்பரங்களால் சென்னையில் பல ஏரிக்கள் ஏரியாக்களாக மாறின. ஆனால் சொல்ல ஒரு உண்மை, பலத்த மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் என்பது தான்.

வெள்ளம் வடிவது இல்லை

சென்னை வேப்பேரி, முகப்பேரி, மேற்கு மாம்பலம், கோயம்பேடு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, கொரட்டூர் என சொல்லிக்கொண்டே போகலாம். வானுயர கட்டிங்கள், நிச்சல் குள வசதிகள், ஜிம் வசதிகள் என் அட்ராக்டிவ் வசதிகளை பார்த்து ஏமாந்து அப்படியே நீர்நிலை பாதைகளில் உள்ள கட்டிடங்களை வாங்கவிட்டார்கள் மக்கள். இது ஒருபுறம் எனில் மழை நீர் செல்வதற்கான வடிகால்கள் ஆக்கிரமிப்பால் அந்த பகுதிகளில் வெள்ளம் வடிவது இல்லை. தொடர்ந்துமழை விழுந்தால் நிலைமை மோசமாகிறது.

தண்ணீர் தீவுகள்

அப்படித்தான் இப்போது தாம்பரம், வேளச்சேரி, வட சென்னை பகுதிகள் சந்தித்துள்ளன. சென்னையில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ள பகுதிகள் எவை எவை என்பதை இப்போது பார்ப்போம். சென்னை தி.நகர் அபுல்லா சலை, பெரியார் நகர், ஜெகநாதன் தெரு, கம்பர் நகர், அசோக் அவென்யூ மணலி வீனஸ்நகர் பாலசுப்பிரமணியம் நகர், கொளத்தூர் பூம்புகார் நகர் ஆகிய இடங்களில் வெள்ளம் இன்னமும் வடியவில்லை.

செம்மஞ்சேரி

இதேபோல் வில்லிவாக்கம் பாபா நகரில் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு ஒரு அடி முதல் 3 அடி வரை தண்ணீர் தேங்கியிருக்கிறது இதேபோல் வேளச்சேரி ராம்நகர், ஊரப்பாக்கம், முடிச்சூர் பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, செம்மஞ்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகள் தனித்தீவாக காணப்படுகின்றன.

மக்கள் தவிப்பு

இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தினசரி பால், பேப்பர், மளிகை பொருட்கள் , ஆன்லைனில்ஆர்டர் செய்யும் பொருட்கள், கேஸ் சிலிண்டர் , தபால், கொரியர் உள்பட எதுவும் அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை. 3 அடி உயரம் வரை பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் வெளியாட்கள் வருவதற்கு தயங்குகிறார்கள். மக்கள் கடினமான மழை நீரில் இறங்கி தங்கள் பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்கிறார்கள்.

அரசுக்கு தெரியும்

இதற்கு நன்றாக வெயில் அடித்தால் சில நாளில் இந்த பிரச்சனைகள் தீரும் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் நிச்சயம் இந்த பகுதிகள் வருண பகவானின் பார்க்கிங் ஏரியாக இருக்க போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு தீர்வை நாம் சொல்ல வேண்டியதில்லை. வசிப்பவர்களுக்கும், அரசுக்குக்குமே தெரியும். அவர்களிடமே இதைவிட்டுவிடுவோம்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/reasons-why-chennai-rains-starts-when-varuna-bhagavan-comes-to-tn-405263.html