சென்னையில் குப்பை கொட்டும் கட்டணம் ரத்து மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொத்துவரி மற்றும் தொழில்வரி 2 தவணையாக வசூலிக்கப்படுகிறது

சென்னை, 

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொத்துவரி மற்றும் தொழில்வரி 2 தவணையாக வசூலிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் இருந்து சொத்துவரியுடன் குப்பை கொட்டுவதற்கான (திடக்கழிவு மேலாண்மை) கட்டணமும் வசூலிக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியநிலையில் குப்பை கொட்டும் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை மாநகராட்சிக்கு (குப்பை கொட்டும் கட்டணம்) செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச்சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/12/25032633/Garbage-dump-in-Chennai-canceled.vpf