சென்னை: காற்றுக்காக கதவைத் திறந்தால் களவுபோகும் லேப்டாப், செல்போன்கள்! – யார் இந்த ராஜதுரை? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனியில் உள்ள விடுதியில் தங்கியிருப்பவர் கிரிதரன் (28). இவர், ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 19.10.2020-ம் தேதி இரவு அறையில் துங்கினார். பின்னர் மறுநாள் காலை கண்விழித்து பார்த்தபோது அறையில் வைத்திருந்த 2 லேப்டாப்கள், 3,700 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த கிரிதரன், கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விடுதி இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அறைக்குள் நுழைந்து லேப்டாப்களைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

லேப்டாப்கள், செல்போன்கள்

இதையடுத்து லேப் டாப்களைத் திருடிய இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்தனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், லேப் டாப் திருடியவரைப் பிடிக்க துணை கமிஷனர் விக்ரமன் உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் கர்ணன், எஸ்.ஐ- ஸ்ரீதர், தலைமை காவலர்கள் தாமோதரன், அச்சுதராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், லேப்டாப் திருடன் குறித்த தகவல்களை சேகரித்து வந்தனர். இந்தச் சமயத்தில் தனிப்படை போலீஸாருக்கு முக்கியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்அடிப்படையில் லேப்டாப்களைத் திருடிய வழக்கில் ராஜதுரை (22) என்பவரை போலீஸார் திருச்சியில் கைது செய்தனர். இவரின் சொந்த ஊர் கள்ளகுறிச்சி, ஜவுளிபாளையம். இவர் மீது ஏற்கெனவே லேப்டாப் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்துவருகிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-man-in-trichy-over-laptop-cellphone-theft