மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகள்; ஜன.20,21-ல் குலுக்கல் முறையில் தேர்வு: சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள 900 ஸ்மார்ட் கடைகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 900 பேர் நீதிபதி முன்னிலையில் ஜன.20 மற்றும் ஜன.21 அன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் நோக்கத்தோடு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட உள்ளது.

மெரினா கடற்கரையில் ஏற்கனவே, வியாபாரம் நடத்தி பெருநகர சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்களை வகை “அ” என்ற அடிப்படையில், 900 கடைகளில் 60 சதவீதம் கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்த விருப்பமுள்ளவர்கள் வகை “ஆ” என்ற அடிப்படையில் 40 சதவீதம் கடைகள் என 360 கடைகளும் குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்ய டிச.14/2020 முதல் டிசம்பர் 26/ 2020 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களால் 21.12.2020 முதல் 26.12.2020 வரை பெருநகர சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகையில் அதற்கென வகைப்படுத்தப்பட்ட பெட்டிகளில் (Drop Box) போடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் 29.12.2020 முதல் 31.12.2020 வரை பரிசீலனை செய்யப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் வகை “அ”-வில் 1348 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வகை “ஆ”-வில் 1853 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ’

மேற்கண்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை தலைமையகம் மற்றும் 1 முதல் 15 வரை உள்ள மண்டல அலுவலகத்திலும் பார்வைக்காக 06.01.2021 முதல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட விவரத்தை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்திலும் (www.chennaicorporation.gov.in) காணலாம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, நீதிபதி முன்னிலையில் ஜன.20 மற்றும் ஜன.21 அன்று குலுக்கல் முறையில் 900 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். குலுக்கல் நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஆணையாளர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/620010-900-smart-shops-in-marina-applicants-will-be-selected-by-random-selection-on-jan-20-21-chennai-corporation.html