சென்னை: விட்டதைப் பிடிக்க வாடிக்கையாளரிடம் முறைகேடு! – வங்கி உதவி மேலாளரின் ரூ.82 லட்சம் மோசடி – Vikatan

சென்னைச் செய்திகள்

இதையடுத்து போலீஸார், உதவி மேலாளர் மாதவனிடம் விசாரித்தனர். விசாரணையில் மாதவன், வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை முறைகேடு செய்தது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாதவனிடம் விசாரித்தபோது பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “கரூர் மாவட்டம், மண்மங்கலம், புதூரைச் சேர்ந்தவர் மாதவன். இவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

பங்குச் சந்தையில் மாதவனுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. விட்டதைப் பிடிக்க கடன் வாங்கி முதலீடு செய்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சென்னை எழும்பூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடன் வாங்கியிருந்த ராமகிருஷ்ணனின் கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை இன்டர்நெட் வங்கி மூலம் மாதவன் கையாடல் செய்திருக்கிறார். அந்தப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்திருக்கிறார். வங்கி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மாதவனைக் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். மாதவன், பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்”என்றனர்.

வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்த 82 லட்சம் ரூபாயை உதவி வங்கி மேலாளரே முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-assistant-bank-manager