கொரோனோவை வென்ற சென்னை டெஸ்ட் | chennai test match 2021 Won Corona– News18 Tamil – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
இந்தியாவில் கொரோனோவை வென்ற சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்வேறு சுவாரஷ்யங்கள் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்தது. 5 வருடத்திற்கு பிறகு சென்னையில் டெஸ்ட், ஜோ ரூட் இரட்டை சதம், அலி பாய் வலிமை அப்டேட், மாஸ்டர் டேன்ஸ்  அஸ்வின், இந்தியாவின் பதிலடி என அனைத்து நிகழ்வுகளையும் சற்று திரும்பிப்பார்க்கிறது.

சென்னை டெஸ்ட் மூலம் இந்தியாவில் சர்வதேச விளையாட்டு உலகம் துளிர்விடத் தொடங்கியுள்ளது. கொரோனோவை வென்ற இந்தியாவில் சர்வதேச  விளையாட்டு போட்டிகள் சென்னையில் தொடங்கியது தமிழகத்திற்கே தனிப் பெருமையாக அமைந்தது.இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் களைகட்டியது.

2016ம் ஆண்டிற்குப் பிறகு சென்னையில் சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் ரசிகர்கள் இல்லாமல் மைதானம் கலையிழந்து காணப்பட்டது. சேப்பாக்கத்தில் சர்வதேச போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.

சேப்பாக்க டெஸ்ட் போட்டியின்  இந்திய அணியில் விளையாடும் லெவனில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணியில் இரண்டு தமிழர்கள் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.

17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும் வெளிநாடுகளில் நடக்ககூடிய போட்டிகளில் மட்டுமே இதுவரை விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் முதல் டெஸ்ட் போட்டியின் போது கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர். உலகக் போரில் பங்கேற்ற கேப்டன் டாம் மூர் அவர்கள் கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். தனது சிறப்பு மிக்க இரட்டை சதத்தையும் பதிவு செய்து சாதனை மேல் சாதனை நிகழ்த்தினார். ஜோஸ் பட்லர் வெற்றிகரமாக  தனது 50 வது போட்டியில் களமிறங்கினார். கேப்டன் ஜோ ரூட் அவருக்கான கேப்பை  வழங்கி கௌரவப்படுத்தினார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் 50% ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்றது. சேப்பாக்கத்தில் அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டி நடைபெற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

நீண்ட நாட்களாக தடைவிதிக்கப்பட்டிருந்த சேப்பாக் மைதானத்தின் ஐ.ஜே.கே கேலரி  இந்த டெஸ்ட் போட்டி மூலம்  ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்கள் நிறைந்து உற்சாகத்தோடு காட்சியளித்தது.

 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் அக்‌ஷர் படேல். இந்த சாதனை படைக்கும் ஆறாவது இந்திய வீரராவார்.

இதற்கு முன் அஸ்வினும் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின்போது ரசிகர்கள் சிக்ஸ் லைனில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் அலி பாய் வலிமை அப்டேட் என கேட்டு அஜித் ரசிகர்கள் சேட்டையில் ஈடுபட்டனர்.

 

இந்த நிகழ்வு வாயே திறக்காத அஜித்தையும் அறிக்கைவிட வைத்தது. மைதானத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி விசில் அடித்து, ரசிகர்களை உற்சாகப்படித்தியதுடன் அவர்களையும் அடிக்க சொல்லி கேட்கல…. சத்தமா என செய்கை செய்து பிகில் சேட்டை செய்தார் விராட்.

 

கொரோனோ அச்சத்தில் வீரர்கள் மைதானத்தில் களமாடிக்கொண்டிருக்க 15 வயதான சென்னை ரசிகர் ஒருவர்  மைதானத்தின் தடுப்பு வேளியை தாண்டி உள்ளே சென்றது அனைவரையும் கதிகலங்க வைத்தது. பிறகு காவலர்களால் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள  அஸ்வின் சேப்பாக்கத்தில் முதல் முறையாக சதம் விளாசினார்.  சேப்பாக்கத்தில் சதம் விளாசும் இரண்டாவது தமிழர். முதல் போட்டியில் 5 விக்கெட் ஹால், இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் அதுமட்டுமல்லாமல் சதம் என சாதனை மேல் சாதனை நிகழ்த்தினார் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக  5 விக்கெட்டுகளை வீழ்த்தி மேல ஒரு சாதனையை நிகழ்த்தினார் அஸ்வின்.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி இரண்டாவது வீரர் என்ற பெருமையை தட்டிச்சென்றார் அஸ்வின். 394 விக்கெட்டுகளை வீழ்த்தி 400 விக்கெட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் அஸ்வின் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். “அஸ்வின் தான் வர்ராரு விக்கெட் எடுக்கப்போராரு”, வெற்றி நடை போடும் தமிழ் மகனே என பதாகைகளுடன் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹிட் மேன் ரோஹித் 161 ரன்கள் குவித்து அசத்தினார்.  மைதானத்தின் கேலரியிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார் அவரது மனைவி ரிட்டிகா ரோஹித்.

Source: https://tamil.news18.com/news/sports/cricket-india-vs-england-chennai-test-2021-highlights-skv-sada-412331.html