குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர்கள் 2 பேர் பலி – பங்குனி உத்திர திருவிழாவுக்கு சென்றபோது பலியான பரிதாபம் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை காண வந்த சென்னை வாலிபர்கள் 2 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

சென்னை:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று பக்தர்கள் திரண்டனர். இந்த நிலையில், விழாவை காண சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 பேர் வந்தனர். அவர்களில் 2 பேர் முருகன் கோவில் அருகே உள்ள பட செட்டிகுளம் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர்.

அங்கு அவர்கள் இருவரும் ஆடைகளை களைந்து தங்களது செல்போன்களை கரையில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினர். இந்த நிலையில், சரியான முறையில் குளம் பராமரிக்கப்படாததால் குளத்தில் சேறும், சகதியும் அதிக அளவு இருந்ததாக தெரிகிறது. அதில் சிக்கிய 2 வாலிபர்களும் வெளியே வர முடியாமல் தத்தளித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் குளத்தில் மூழ்கி இறந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இறந்து போன வாலிபர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பலியான வாலிபர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த நெகேமியா (வயது 18), கிஷோர் குமார் (23) என்பது தெரியவந்தது. நெகேமியா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கிஷோர் குமார் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை காணவந்த போது குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/03/29085416/2482605/Tamil-news-Chennai-near-Two-Chennai-youths-drowned.vpf