சென்னையில் 358 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது – மாநகராட்சி கமிஷனர் – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

சென்னையில் 358 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை:

சென்னை ரிப்பன் மாளிகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் ராட்சத பலுனை பறக்கவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.26 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் மட்டுமே ரூ.7.5 கோடி அடங்கும். நேற்று (நேற்று முன்தினம்) மட்டுமே ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதில் ரூ.5.88 கோடி பணம் அடங்கும்.

இன்று (நேற்று) காலை மேலும் ரூ.1.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 70 முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளித்துள்ளனர். மொத்தம் 7 ஆயிரத்து 300 வாக்காளர்களில் ஒரு சிலர் வீடுகள் பூட்டப்பட்டிருந்தது. மேலும் ஒரு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் போலீசார் அல்லாமல் 28 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் உள்ளனர். இதில் 5 ஆயிரம் நபர்கள் தபால் வாக்கு போட்டுள்ளனர். மேலும், வாக்கு அளிக்காதவர்கள் ஏப்ரல் 3 மற்றும் 5-ந்தேதிகளில் நடைபெறும் பயிற்சி மையங்களில் வாக்களிக்கலாம்.

சென்னையில் 577 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 30 முக்கியமான வாக்குச்சாவடிகளும் அடையாளாம் காணப்பட்டுள்ளது. அங்கு மத்திய ராணுவப்படை, நுண் பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

கொரோனாவை பொருத்தவரைக்கும் தனிமனித பொறுப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அதனால் பொறுப்புணர்ந்து அனைவரும் முககவசம் போட வேண்டும். இதுவரை சென்னையில் 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன், பழைய திட்டங்களை மீண்டும் தீவிரமாக செயல்படுத்தி, முழுவதுமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் 358 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தெருக்களை கட்டுப்பாட்டு மையங்களாக அறிவித்துள்ளோம்.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டில் இருப்போருக்கு வாக்களிக்கும் வசதியாக வாக்கு அளிக்கும் நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அத்திபட்டில் 6 ஆயிரம் படுக்கைகளும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆயிரம் படுக்கைகளும், சென்னை பல்கலைக்கழக விடுதியில் ஆயிரம் படுக்கைகளும் தயாராக உள்ளது. அதேபோல் விக்டோரியா விடுதியில் பழைய முறைகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/state/2021/03/31095035/2493052/Tamil-news-358-streets-in-Chennai-are-under-Corona.vpf