சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் 59 சதவீதம் வாக்குப்பதிவு: மற்ற மாவட்டங்களைவிட குறைவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. இது, மற்ற மாவட்டங்களை விட குறைவாகும். சென்னையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நேற்று வாக்குபதிவு நடைபெற்றது.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மையாக இருந்ததை பார்க்க முடிந்தது. இதற்கிடையே, நேற்று காலை 7 மணி முதலே மக்கள் வாக்களிக்க ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தனர்.

வாக்குச்சாவடிகளில் வெப்பநிலைமானி மூலம் வாக்காளர்களை பரிசோதித்தும், வாக்காளர்கள் கைகளை முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஈக்காட்டு தாங்கலில் ஒரு வாக்குச்சாவடி, அடையார் தமோதரபுரம் வாக்குச்சாவடி, புரசைவாக்கம் பிளவர்ஸ் சாலை அருகேவுள்ள வாக்குச்சாவடி, மயிலாப்பூரில் சைதன்யா பள்ளி வாக்குச்சாவடி போன்ற சில இடங்களில் ஓரிரு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால், 2 மணிநேரம் வரையில் வாக்குப்பதிவு தாமதமானது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்த பிறகு, தொடர்ந்து வாக்குபதிவு நடைபெற்றது.

மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் கூட்டம் குறைவாக இருந்ததை பார்க்க முடிந்தது. மாலை 5 மணிக்கு பிறகு பொதுமக்கள் ஓரளவுக்கு வந்து வாக்களித்தனர். பல வாக்குச்சாவடிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பூத் சிலிப் வாங்குவதற்கு வாக்காளர்கள் திரண்டு நின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியிலும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கிலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரம் நடுநிலைப்பள்ளியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள காவேரி பள்ளியிலும் வாக்களித்தனர்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 59.40 சதவீத வாக்குபதிவு நடைபெற்றது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் தான் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/655901-chennai-vote-percentage.html