சென்னை: போதையில் தூங்கிய கடத்தல்காரர்கள் – சாதுர்யமாகத் தப்பித்த சிறுவன்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை கொளத்தூர், வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் கணேசன் (48). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரின் மகன் விக்னேஷ் (14). பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 27-ம் தேதி இரவு 8:30 மணியளவில் விக்னேஷ், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. அந்த நேரத்தில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் அவ்வழியாக வந்திருக்கின்றனர். அவர்கள் விக்னேஷிடம் பேச்சு கொடுத்து, அசந்த நேரத்தில் சிறுவனை பைக்கில் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து விக்னேஷை காணவில்லை என தந்தை கணேசன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில் கணேசனுக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர்,“உன் மகனைக் கடத்திவைத்திருக்கிறோம். 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் உயிரோடு விட்டுவிடுகிறோம்” எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு கணேசன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்தத் தகவலை போலீஸாரிடம் கணேசன் கூறினார். அதனால் அவருக்கு வந்த போன் நம்பரின் சிக்னலை போலீஸார் ஆய்வு செய்துவந்தனர்.

இதற்கிடையில் இரவு 11 மணியளவில் விக்னேஷ் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி வீட்டுக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர் இதையடுத்து விக்னேஷிடம் அவனின் பெற்றோர் விசாரித்தனர். அதன் பிறகு விக்னேஷ் வீட்டுக்கு வந்த தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜமங்கலம் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான போலீஸார் விக்னேஷிடம் கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்தனர். அப்போது விக்னேஷ் கூறிய தகவல் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள ஒரு வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அங்கு போதையில் இருந்த இருவரைப் பிடித்து, அதிகாலை 1:30 மணியளவில் காவல் நியைத்துக்குக் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, கச்சினாக்குப்பம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் (29), அவரது கூட்டாளி அஜித்குமார் (24) எனத் தெரியவந்தது. இவர்களில் லோகேஸ்வரன் மீது கொலை வழக்கு, குழந்தைக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இருவரையும் கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். இது குறித்து ராஜமங்கலம் போலீஸார் கூறுகையில், “லோகேஸ்வரன் ஏற்கெனவே குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டு போலீஸில் சிக்கியிருக்கிறார். மீண்டும் பணத்துக்காக சிறுவனை கடத்தியுள்ளார். விக்னேஷைக் கடத்திய லோகேஸ்வரன், அஜித் இருவரும் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். பின்னர் இருவரும் மது அருந்தியிருக்கின்றனர். போதையில் இருவரும் நன்றாகத் தூங்கிவிட்டனர். அந்தச் சமயத்தில் விக்னேஷ். அங்கிருந்து தப்பி வந்துவிட்டார்” என்றனர்.

Source: https://www.vikatan.com/social-affairs/crime/chennai-school-student-trafficking-by-young-thieves