கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்பவர்கள் தப்ப முடியாது – சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதை பொருள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி யாக பொறுப்பு வகித்துவந்த சங்கர் ஜிவாலை சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்புவைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ல் சபரிமலை கோவில் நடை திறப்பு – பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

1990 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த சங்கர் ஜிவால், சேலம்,மதுரை எஸ்பியாக பணியாற்றியுள்ளார். மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மத்திய அரசு பணியில் 8 வருடமும்,திருச்சி காவல் ஆணையராகவும்,ஐஜி உளவுத்துறை,ஏடிஜிபி சிறப்பு காவல் படை என முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வந்துள்ளார். இவரது உழைப்பிற்கு பிரதமரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கம் உட்பட பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

காவலர்களின் பாதுகாப்பு உறுதி

செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்களப் பணியாளர்களான காவல்துறைக்கு N-95 முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள போதும், சில காவல்துறையினர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை

கொரோனாவை எதிர்த்து முன்களப் பணியாளர்களாக போராடி வரும் காவல்துறையினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

ரவுடிகள்

சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போதை பொருள் குற்றவாளிகள் மீது உடனடியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ரெம்டெசிவிர் கள்ளச் சந்தை விற்பனை, கஞ்சா விற்பனை போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை (Organised Crime) கண்காணிக்க உளவுத்துறை மூலம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஊரடங்கு அமல்

இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஹாட் ஸ்பாட் பகுதி எது என்பதை கண்டறிந்து அங்கிருந்து குற்றம் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று கூறினார். ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் சூழ்நிலைக்கேற்ப மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை

ஊரடங்கின்போது தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களுக்கு சூழ்நிலையை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் அதையும் மீறி வெளியில் வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/rowdies-can-t-escape-says-chennai-metropolitan-police-commissioner-shankar-jiwal-420254.html