சென்னையில் கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் செயல்பட்டு வரும் 21 கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 09), சென்னை, வியாசர்பாடியில் அமைந்துள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முறையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

அப்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 11,800 களப்பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதனை நானே நேரில் சென்று தினமும் ஆய்வு செய்யவுள்ளேன்.

மேலும், தற்பொழுது சென்னையில் செயல்பட்டு வரும் 21 கோவிட் பரிசோதனை மையங்களை 30 ஆக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து பரிசோதனை மையங்களின் இருப்பிடங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்படவுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களுக்கான நோயின் தன்மையினை அறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்”.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Source: https://www.hindutamil.in/news/breaking-news/668786-covid-testing-centres-will-be-increased-in-chennai-ma-subramanian.html