நாளை முதல் முழு ஊரடங்கு: சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன் வாங்க குவிந்த மக்கள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளநிலையில், சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.

சென்னை,

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகபரவிவரும் நிலையில், நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று  நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம் இதை தவிர்த்து பிற கடைகள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

இந்நிலையில் சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.  போலீசார் புதிய மீன்பிடி தளத்தை கட்டைகள் அமைத்து சிறு வியாபாரிகளும், ஏலம் விடுபவர்களும் இந்த இடத்தில்தான் விற்பனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மீன்வாங்க வருபவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் சமூக இடைவெளி ஏற்படுத்தும் விதமாக மீன் விற்பனை தளம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுத்தப்பட்டு வருகிறது. மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால் விரும்பும் மீன் வகைகள் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் நிலவுகிறது. 

கடைகள், திறப்பு, பேருந்துகள் இயக்கம் போன்றவற்றால் இன்று தமிழகம் முழுவதும் பிரதான சாலைகள் வழக்கம் போல் பரபரப்பாக காணப்படுகிறது. 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/05/23093551/Full-curfew-from-tomorrow-People-gathered-in-Chennai.vpf