விதிகளை மீறி கட்டப்பட்ட கல்லறை: நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி? – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள சுடுகாட்டில், விதிகளைமீறி வீடு போல் கல்லறை கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள. அப்பகுதி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டது என்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கே சமாதி அமைக்க விரும்பினால் 9,000 ரூபாயைக் கட்டணமாக வசூலித்துக்கொண்டு ஆறடி நீளம், மூன்றடி அகலத்தில் சமாதி அமைத்துக்கொள்ள மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த வசந்தா என்ற பெண்ணிற்கு அமைக்கப்பட்ட சமாதி விதிகளை மீறி பத்தடி நீளம், எட்டடி அகலத்தில், கல்லறை கட்டப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குறிய கல்லறை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி‌களிடம் விசாரித்தபோது “மூலக்கொத்தளம் சுடுகாட்டில், ஆறு அடி நீளம் மூன்றடி அகலத்தில்தான் கல்லறை அமைக்கத்தான் மாநகராட்சி அமைத்துள்ளது. ஆனால், வீடு போல் பெரிய அளவில் கல்லறை கட்டப்பட்டுள்ளது எனப் புகார்கள் வந்துள்ளன. மாநகராட்சியின் அனுமதி இன்றி விதிமீறி கல்லறை கட்டப்பட்டிருந்தால், கல்லறை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அது குறித்து விளக்கம் கேட்டு அப்பகுதி பொறுப்பாளருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விதிகளை மீறி கல்லறையைக் கட்டியதாகக் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறிக் கட்டப்பட்ட கல்லறையை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. கல்லறை கட்டுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணம் வாங்கினார்களா இல்லையா என்பது குறித்தெல்லாம் விசாரணைக்குப் பின்னர் தான் சொல்ல முடியும். தற்போதைக்கு முறைகேடாக எப்படி கல்லறை கட்டப்பட்டுள்ளது என்பது குறித்து முதற்கட்ட விசாரணை சென்றுகொண்டிருக்கிறது” என்றனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு இடம் இல்லாத நிலையில், வீடு போல் கல்லறையைக் கட்டியுள்ள சம்பவம் சென்னை ராயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லறையை இடிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Source: https://www.vikatan.com/government-and-politics/politics/will-chennai-corporation-takes-action-on-the-illegally-built-cemetery