சென்னையில் சுதந்திர தின நினைவுத்தூண்.. ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சிறப்புகள் என்னென்ன? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவுத்தூணை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நினைவு தூண் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுக்கிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்படும் மீரா மிதுன்..போலீஸாருடன் தொடர் வாக்குவாதம்காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்படும் மீரா மிதுன்..போலீஸாருடன் தொடர் வாக்குவாதம்

இதேபோல் சென்னை கோட்டையில் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன்பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

மக்களுக்கு நன்றி

”75-வது சுதந்திர தூண் கல்லாலும், மண்ணாலும் உருவானதல்ல. பல்வேறு தியாகிகளின் ரத்தத்தாலும், சதையாலும் உருவானதாகும். இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டை நாம் மாற்றியுள்ளோம். திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம். கொரோனா நோய் தொற்றை நாம் வலுவாக போராடி வெற்றி பெற்றுள்ளோம். முதன் முதலாக தேசியக்கொடியேற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

சாதனை புரிந்தவர்களுக்கு விருது

இதனை தொடர்ந்து கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல் கலாம் விருது என்பவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை நேப்பியர் மேம்பாலம் அருகே சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சுதந்திர தின நினைவுத்தூண்

59 அடி உயரத்தில் உள்ள சுதந்திர தின நினைவுத்தூண் 1.98 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்பாகம் மட்டும் கான்கிரீட் தளமாக உள்ளது. அதற்கு மேல் துருப்பிடிக்காத உலோகத்தால் நினைவுத்தூண் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சியில் அசோக சின்னம், அசோக சக்கரம், நான்கு புறமும் ராணுவ வீரர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் கட்டப்பட்டது

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தூண் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திறப்பு விழாவில் முதல்வர் மு.கஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தி.மு.க அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Tamil Nadu Chief Minister MK Stalin inaugurated the Independence Day memorial near the Napier Bridge in Chennai. The monument was completed in 10 days

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-cm-m-k-stalin-inaugurated-the-independence-day-memorial-in-chennai-430013.html