Madras Day: சென்னைக்கு வயது 382.. அது என்ன மெட்ராஸ் டே? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆகஸ்ட் 22ம் தேதி, அதாவது, நாளை மறுநாள், மெட்ராஸ் டே (Madras Day) கொண்டாடப்பட உள்ளது. 2கே கிட்ஸ் பலருக்கும் அது என்ன டே என்ற சந்தேகம் இருக்க கூடும். தமிழகத்தின் தலைநகர் சென்னைதான் முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதும், 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதிதான், அது சென்னை என அதிகாரப்பூர்வ பெயரை பெற்றதும் சிலரால் அறிந்திருக்கப்படவும் கூடும்.

கோடநாடு வழக்கு: அடுத்த 8 நாட்கள் மிக முக்கியம்.. சயனை கண்காணிக்கும் போலீஸ்.. ஊட்டியில் விறுவிறுப்புகோடநாடு வழக்கு: அடுத்த 8 நாட்கள் மிக முக்கியம்.. சயனை கண்காணிக்கும் போலீஸ்.. ஊட்டியில் விறுவிறுப்பு

1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இப்போது சென்னையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ளதல்லவா அந்த இடத்தை வாங்கினார்கள். இந்த இடத்தை விற்றது அய்யப்பன் நாயக்கர் மற்றும் வேங்கடப்பன் ஆகியோர். அவர்களது தந்தைதான் சென்னப்ப நாயக்கர். கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டிருந்தது. ஆனால், போர்த்துகீசியர்கள், 1522ல் சாந்தோம் பகுதியில் துறைமுகத்தை நிறுவி ‘மெட்ராஸ்’ என்று அழைத்தனர். அதாவது மெட்ராஸ் என்ற பெயர் 16வது நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது.

தற்போது, சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது

சென்னை அப்போதெல்லாம் பெரிய நகரம் கிடையாது. கிராமம்தான். ஆனால், கிழக்கு இந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது முதல் பல முன்னேற்றங்கள் இங்கு ஏற்பட்டன. எனவேதான் அது பெரிய நகரமாக உருவெடுத்தது. சென்னைக்கு பல பழம் பெருமைகள் உண்டு. 1688ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதராஸ் நகரை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதாவது நாட்டின் முதல் நகராட்சியே சென்னைதான். சென்னை மாநகரம் ஆகஸ்ட் 22ம் தேதி 382வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 1639ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டதாக கருதி, இதையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள். சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004 இல் மெட்ராஸ்டே கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.

மதராஸ் மாகாணம்

ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக மதராஸ் நகரைத் தேர்ந்தெடுத்தார். பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றாக மதராஸ் மாறியது. ‘மதராஸ் மாகாணம்’ எனும் பெயர் சூட்டப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா என பல பகுதிகளில் இப்போது உள்ள ஊர்களும், மதராஸ் மாகாணத்திற்குள் உள்ள இடமாக இருந்தன.

தமிழ்நாடு உதயம்

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் அறிவிக்கப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் மாகாணம் வேண்டாம் என்று, 1969ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என நமது மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது. அப்போது முதல், மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் மக்களால் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது. அதிலும் மெட்ராஸ் என்பதுதான் சாமானியர்களுக்கும் பழக்கப்பட்ட பெயராக விளங்கியது.

சென்னை என பெயர் மாற்றம்

1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. அன்று முதல் மெட்ராஸ் என்ற சொல்லாடல் குறைந்து கொண்டே வந்து இப்போது ஏறக்குறைய மறக்கப்பட்ட பெயராகிவிட்டது. ஆனால், பழம் பெருமை கொண்ட நகரை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு வருடமும், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, மெட்ராஸ் டே என்ற தினம் கொண்டாடப்படுகிறது.

பல நிகழ்ச்சிகள்

இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டும் ‘மெட்ராஸ்’ தினத்தை கொண்டாடும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு தூய்மைப் பணி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மரக்கன்று நடுதல், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்தல், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

382வது ஆண்டு நிறைவு

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகரின் வரலாற்றினை சிறப்பிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற உள்ள மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதராசப் பட்டினம் 1639ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சென்னை மாநகரமாக 382வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. மேலும் இந்தச் சிறப்பு மிக்க மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் வகையில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

மரக்கன்றுகள் நடுதல்

மெட்ராஸ் தினத்தினை கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் குடிசைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் 22.08.2021 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைத்தல், தீவிரத் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல் மற்றும் சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்துதல் போன்ற பணிகளும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு நடமாடும் முகாமினை தொடங்கி வைத்தல், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் காப்பகங்களில் அழகுப்படுத்தும் வகையில் கோலங்கள் போடுதல், பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் அழகுப்படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வாட்ஸ்அப்புக்கு அனுப்பலாம்

மேலும், குடிசைப் பகுதிகளில் சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை செல்ஃபி புகைப்படம் எடுத்து 94451 90856 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தில் பகிரப்படும். மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp-ல் பகிரலாம். ஆர்வமுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மெட்ராஸ் தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், மேலும், இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாட CSR நிதியினை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய விவரங்களை https://forms.gle/8KYXEhgjuTK7opfR7 என்ற இணைப்பில் சென்று பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Madras day 2021: Why Madras Day has been celebrated and what is the history behind Chennai? here is the detail.

Source: https://tamil.oneindia.com/news/chennai/why-madras-day-has-been-celebrated-explainer-430467.html