சைவமா? அசைவமா சுவையில் நீங்கள் எந்த வகை? வாய்க்கு ருசியாக உணவளிக்கும் சென்னை ஹோட்டல்கள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையை நோக்கி தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையவும் நாவிற்கு ருசியாகவும் சாப்பிட தேடுவது சிறந்த ஹோட்டலைத்தான்.
மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட அந்தக்காலம் முதல் சென்னை மாநகரம் என்று அழைக்கப்படும் இன்றையகாலம் வரை சுவையாகவும் சூடாகவும் பேசப்பட்டு வரும் உணவகங்கள் பல உண்டு. மெட்ராஸ் டே எனப்படும் சென்னையின் பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சென்னை நகரில் உள்ள சில ருசியான உணவகங்களைப் பற்றி பார்க்கலாம்.

சைவ பிரியர்களுக்கு ரத்னா கபே, சரவணபவன், சங்கீதா, மயிலாப்பூர் மாமி மெஸ்,பாரதி மெஸ் என சுவையாக சாப்பிட பல ஹோட்டல்கள் சுவையான உணவு தர காத்திருக்கின்றன. அசைவப்பிரியர்களுக்கு பிரியாணியை சுவையாக தரும் புஹாரி முதல் திண்டுக்கல் தலப்பாகட்டி, பொன்னப்பர், குமார் மெஸ், மதுரை பாண்டியன் ஹோட்டல் வரைக்கும் காரசாரமான உணவுகளைத் தர தயாராகவே இருக்கின்றனர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு போன உடன் முதன் முதலில் ஹோட்டலில் நான் சாப்பிட்ட உணவு சோலாபூரி சன்னா மசாலா. மயிலாப்பூர்சரவண பவனில் சாப்பிட்டது இன்றைக்கும் நினைவிருக்கிறது. 15 ஆண்டு கால சென்னை வாழ்க்கையில் பல ஹோட்டல்களில் சாப்பிட்டிருந்தாலும் முதலில் முதலில் சாப்பிட்ட ஹோட்டலை இன்றைக்கும் மறக்க முடியவில்லை. சென்னையின் முக்கிய பகுதிகளில் பல கிளைகள் இருந்தாலும் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சரவணபவனின் சாப்பிடுவதுதான் அலாதியான சுவையைக் கொடுக்கும். காலை நேர நடைபயிற்சிக்கு செல்பவர்கள் சரவணபவனின் ஒரு காபி சாப்பிடாமல் போக மாட்டார்கள்.

மயிலாப்பூர் மாமி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டவர்களுக்கு வேறு கடையில் சாப்பிட பிடிக்காது அந்த அளவிற்கு உணவில் தனித்துவம் மிக்க ருசி இருக்கும். தோசையும் சாம்பாரின் சுவையும் அலாதி சுவையை தரும். பாரதி மெஸ் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ருசிப்பிரியர்களை ஈர்த்து விட்டது. . கம்பு லட்டு, ராகி லட்டு, ராகிக் கொழுக்கட்டை, ராகிக் கஞ்சி, உளுந்து கஞ்சி, சுக்கு-மிளகு-திப்பிலி கலந்த சுமிதி பால் என்று இங்கு வழங்கப்படும் உணவு வகைகள் அனைத்துமே வித்தியாசமானவை, ஆரோக்கியமானவை. சுத்தமான எண்ணெய், செயற்கை மணமூட்டிகள் சேர்ப்பதில்லை. சோட உப்பு கூட போடுவதில்லை. கடைக்குப் போனால் இரண்டு மூன்று அயிட்டங்களை ருசி பார்க்காமல் யாரும் வரமாட்டார்கள்.

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோயில் எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு ரத்னா கஃபேவும் பிரபலம். பார்த்தசாரதியை தரிசனம் செய்த கையோடு சுடச்சுட இட்லியும் மிதக்க மிதக்க ஊற்றிய சாம்பாரும் சாப்பிட்டு வருவது பலரது வழக்கம். சங்கீதா சைவ உணவகமும் சத்தமில்லாமல் பல சுவைஞர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் உணவுப் பிரியர்கள் பலரும் வடகறியின் ருசிக்கு அடிமையானவர்கள் இருக்கிறார்கள்.
பருப்பு வடையின் அடுத்த அப்டேட் வெர்ஷன்தான் இந்த வடகறி. கடையில் பருப்பு வடைக்காக தயாரிக்கப்பட்ட கடலைமாவு மீதமான நிலையில், அதனை வெங்காயம், தக்காளி, மசாலா கலவையோடு சேர்த்து தயாரிக்கப்படும் உணவுதான் வடகறி. இந்த வடகறி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எல்லா காலை உணவுகளுக்கும் பிரதான சைட் டிஷ் ஆக உள்ளது. சைதாப்பேட்டையில் இயங்கி வரும் மாரி உணவகம்தான் வடகறியை அறிமுகப்படுத்தியது. மாரி ஓட்டலில் வடகறியை வாங்குவதற்கென்ற ஏராளமான மக்கள் தனியாக வீட்டில் இருந்து பாத்திரம் எடுத்து வருகின்றனர்.

சென்னை, அடையார், கஸ்தூரிபாய் நகரிலுள்ள சர்தார் பட்டேல் சாலையிலுள்ளது ப்ரேம்ஸ் கிராம போஜனம் உணவகம். பார்க்க கிராமத்து வீடு போலவே தோற்றமளிக்கும் இந்த உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் எதிலும் சிறிதளவு அரிசி கூட சேர்க்கப்படுவதில்லை. சிறுதானிய உணவுகள்தான் பலரையும் இந்த உணவகத்தை நோக்கி வரவழைத்துள்ளது.

தி. நகர் பாண்டி பஜாரிலும், ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக அலுவலகத்திற்கு அருகில் இருந்த பாண்டியன் ஹோட்டல் அசைவ உணவுப் பிரியர்களின் நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும். நண்டு மசாலா, அயிரை மீன் குழம்பு, காடை ப்ரை, கரண்டி ஆம்லேட், ஆட்டுக்கால் பாயா, சீரகசம்பா அரிசி பிரியாணி என வெகு ஜனப் பிரியர்களை மட்டுமல்லாது பல அரசியல் தலைவர்கள் பலரையும் தனது பக்கம் ஈர்த்துள்ளது பாண்டியன் மெஸ். இட்லி கோழிக்கறி ஹோட்டலில் குழம்பு சுவைக்காகவே மீண்டும் மீண்டும் சாப்பிட போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆப்பம் தேங்காய் பால் சாப்பிட்டு பழகியவர்களுக்கு ஆட்டுக்கால் பாயா சேர்த்த ஆப்பத்தை அறிமுகப்படுத்தியது நளாஸ் ஆப்பக்கடை. பாம்ஷோர் ஹோட்டலின் மீன் உணவுகளுக்கும் நான், பட்டர் சிக்கன் மசாலா சுவைக்கு அடிமையானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இது நான் சாப்பிட்ட ஹோட்டல்களில் உணவின் ருசி பற்றிதான் எழுதியுள்ளேன்.

புகாரி ஹோட்டலிலும் திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலிலும் பிரியாணியும் அசைவ உணவு வகைகளும் சாப்பிட்டிருந்தாலும் பிரியாணியின் ருசி ஒவ்வொரு ஹோட்டலுக்கும் தனித்துவம் கொண்டிருக்கும். கடந்த 15 ஆண்டுகளில் நான் ருசித்த உணவுகளையும் ஹோட்டல்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். பழங்கால சென்னையின் பெருமை பற்றியும் உணவகங்களைப் பற்றியும் முக நூல் பக்கத்தில் ருசியோடு எழுதியுள்ளார் ஒருவர் அதையும் கொஞ்சம் சுவைக்கலாம்.

மெட்ராஸ் டவுனில் இருந்த சுவைமிகு ஹோட்டல்கள்

நான் இரண்டு இட்லி இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி” என்பவர்கள் முதல்.. “மணிக்கு ஒரு காய் பரிமாறப்படும்”என்ற ஹோட்டல் வரை.. அந்தக் கால ‘ஆஹா ஓஹோ’ சுவைமிகு சென்னை!

அன்றைய சென்னை நகரம் இன்றைய அளவை விட மிகவும் சிறியது. இன்று பிரபலமாக விளங்கும் பல பகுதிகள், அன்று காடாகவும் கட்டாந்தரையாகவும் தோப்புகளாகவும் இருந்தன.உணவு விடுதிகள் பெரும்பாலும் ‘டவுன்’ என்று அழைக்கப்படும் வடசென்னைப்பகுதியில்தான் இருந்தன.

இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அந்த நாளில் கல்லூரிகள், ஆபீஸ்கள், நீதிமன்றங்கள் எல்லாம் இந்த ‘டவுன்’ பகுதியில்தான் இருந்தன. பெரும்பாலான விடுதிகளின் வாசலில் ‘பிராமணாள் காபி ஓட்டல்’ பலகைகள் தொங்கும். இந்த வழக்கம் 1950வரை நீடித்திருந்தது!

தங்கசாலைத் தெருவில் ‘காசி பாட்டி ஓட்டல்’ என்று ஒரு ஓட்டல் இருந்தது. காசிக்குச் சென்று வந்த ஒரு பிராமண அம்மையார், போற இடத்துக்குப் புண்ணியம் கிடைக்குமென்று இந்த உணவு விடுதியைத் தொடங்கினார். அவருடைய சமையல் சுவையாக இருந்ததால் கூட்டம் சேர ஆரம்பித்தது. அந்த நாளில் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் ‘தாங்கள் செய்வது வியாபாரமல்ல… அன்னதானம்’ என்றுதான் நினைத்தார்கள். ‘லாபத்தைவிட புண்ணியம்தான் பெரிது’ என்று நம்பினார்கள். அதனால்தான் அந்த நாளில் ‘அளவுச்சாப்பாடு’ என்ற பேச்சே கிடையாது. காசி பாட்டி ஓட்டலில் எடுப்புச் சாப்பாட்டின் விலை இரண்டணா. நெய் தாராளமாகவே பரிமாறப்படும்.

அன்றைய ‘மெட்ராஸ் பிரசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட சென்னை மாகாணம், இருபத்தாறு ஜில்லாக்களைக் கொண்டது. அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாலாயிரம் வக்கீல்கள் இருந்தனர். நீதிமன்றத்துக்கு வரும் கூட்டம் மிகவும் அதிகம். அவர்களை நம்பி நடத்தப்பட்ட உணவு விடுதிகள் பல உண்டு.
தம்புச்செட்டித் தெருவில் இப்படிப்பட்ட உணவு விடுதிகள், தஞ்சாவூர்க்காரர்கள், பாலக்காட்டுக்காரர்கள், உடுப்பிக்காரர்கள் ஆகியோரின் கையில்தான் இருந்தன.

தம்புச்செட்டித் தெருவில் ‘மனோரமா லஞ்ச் ஹோம்’ 1920களில் ஏ.நாராயணஸ்வாமி ஐயர் என்பவரால் தொடங்கப்பட்டது. இங்கு அனைத்துமே நெய்யில்தான் செய்யப்படும். வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இந்தத் தெருவில் ஒரு கேன்டீனைத் தொடங்கினர். இந்த விடுதியில் வியாபாரம் பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரைதான். இரண்டு மணிக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் இட்லி, போண்டா, வடை போன்றவற்றைப் பாதி விலைக்கு விற்று விடுவார்கள்.

‘தம்புச்செட்டித் தெருவில் சிற்றுண்டி உணவகம் வைத்தால் லாபம் தரும்’ என்றொரு நம்பிக்கை பலரை இந்தத் தெருவுக்கு அழைத்தது. இந்த நாளில் ‘சரித்திரம் படைத்த ஓட்டல் சக்கரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட ‘தாசப்பிரகாஷ்’ புகழ் கே.சீதாராமராவ் இங்குதான் வளரத் தொடங்கினார்.

இன்று உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ‘மசாலா தோசை’யைச் சென்னைக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான். நெய்யில் செய்யப்பட்டு, ‘மைசூர் மசாலா தோசை’ என்று அழைக்கப்பட்ட இதன் விலை அரையணா. அன்று ஓர் இந்திய ரூபாய்க்குப் பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு நாலு காலணா அல்லது பன்னிரண்டு தம்பிடிகள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடிகள். பன்னிரண்டு தம்பிடிகள் கையில் இருந்தாலே, வயிறு நிறையச் சாப்பிடலாம். ‘மைசூர் போண்டா’ என்று அன்றுபோல இன்றும் அழைக்கப்படும் இந்தச் சுவையான சிற்றுண்டியைச் சென்னைக்குக் கொண்டு வந்தவரும் சீதாராமராவ்தான்.

உடுப்பி சமையல் முறையில் சாம்பார், ரசம் ஆகியவற்றில் வெல்லத்தைச் சற்றுக் கலப்பார்கள். இதற்குத் தனியான சுவை உண்டு. இரண்டு இட்லிக்கு இரண்டு பக்கெட் சாம்பார் சாப்பிடுபவர்களும் அந்த நாளிலும் உண்டு. ‘நான் இரண்டு இட்லி, இரண்டு பக்கெட் சாம்பார் ஆசாமி’ என்று சொல்லிப் பெருமைப்படுவதில் அந்த நாளில் பலர் இருந்தனர்.’பிராட்வே’ என்றழைக்கப்படும் குறுகிய சாலையிலும் பிரபலமான உணவகங்கள் இருந்தன. இந்தத் தொழிலில் முன்னோடியாகக் கருதப்படும் சங்கர ஐயர், இங்கு ‘சங்கர் கபே’ என்ற பெயரில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார். இது மிகவும் பிரபலமடை ந்தது. இந்தஇடத்தில் தான் பின்னாளில் ‘அம்பீஸ் கபே’ இயங்கத் தொடங்கியது.

இன்று முழுமையாக மறக்கப்பட்ட மற்றொரு உணவகம் ‘கராச்சி கபே’. இதைத் தொடங்கியவர்கள், சென்னையின் மிகப் பிரபலமான துணி வியாபாரிகளான கிஷன்சந்த்ஸ்-செல்லாராம்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் சிந்திக்காரர்கள். கராச்சியிலிருந்து வந்தவர்கள். இது, ஹை-கோர்ட்டுக்கு எதிரில், இன்றைய பாம்பே மியூச்சுவல் கட்டடத்துக்கு அருகே இருந்தது. சென்னை நகரத்திலேயே முதன்முறையாக ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஒரு தனியறை அந்த நாளில் சரித்திரம் படைத்தது.

இந்த உணவகத்தின் வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பதுண்டு. ‘உள்ளே போனா குளிருமாமே” என்று மூக்கின்மேல் விரலை வைத்தவர்களும் உண்டு. இந்த உணவகத்தின் ‘கராச்சி அல்வா’ அன்று மிகப் பிரபலம். அந்த நாளில் இனிப்புப் பண்டங்களுக்கு வடஇந்திய அடையாளத்தோடு பெயர்கள் வைப்பது வழக்கம். காசி அல்வா, டெல்லி பாதுஷா, கல்கத்தா மல்கோவா, பாம்பே அல்வா… இப்படிப் பல! இவற்றின் விலை இரண்டணாதான். பாதாம் அல்வாவுக்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. அதன் விலை மூனணா.

‘இந்த அல்வா வேண்டும்’ என்று ஒருவர் கேட்டால், அவர் மிகப் பணக்காரர் என்று அர்த்தம். எல்லோரும் அவரையே பார்ப்பார்கள். பாதாம் அல்வா என்றால், உடனே மனதில் பளிச்செனத் தோன்றுவது, ‘கோயம்புத்தூர் கிருஷ்ண ஐயர்’தான். மிகப் பிரபலமான இந்த உணவகம் திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் பாரதியார் சாலை இருந்தது. இதன் உள்ளே சென்றால், படாடோபம் இல்லாத ஒரு நடுத்தர வீடு போலத்தான் இருக்கும். ஆனால், இங்கு வக்கீல்கள், எழுத்தாளர்கள், சினிமாவுலகப் பிரமுகர்கள் அன்றைய சென்னை நகரத்தின் பல பிரபலங்களை அடிக்கடிப் பார்க்கலாம். சரித்திரம் படைத்த எஸ்.எஸ்.வாசன், கல்கி போன்றவர்களும் இங்கு வருவதுண்டு. பாதாம் அல்வாவைச் சாப்பிடுவதற்கென்றே சென்னை நகரில் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வருவார்கள்.

அதுபோலவே, மயிலாப்பூரில் ராயர் ஓட்டல் மிகவும் பிரபலம். ‘இங்கு இட்லி சாப்பிட்டால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்’ என்று அந்த நாளில் நினைத்தவர்களும் ஓட்டலுக்கு ரெகுலர் கஸ்டமர்கள். இதில் சினிமாக்காரர்களும் உண்டு. அவர்களில் ஒருவர், ஜெமினி கணேசன்! அதுபோலவே, தங்கசாலை தெருவில் ‘சீனிவாஸ் பவன்’ மிகவும் புகழ்பெற்றது. இந்த உணவகம் மாலை ஏழு மணிக்குத்தான் திறக்கப்படும். நள்ளிரவைத் தாண்டி மூடப்படும். இங்கு விசேஷம் என்னவென்றால், பூரியுடன் ‘பாசந்தி’தான் கொடுப்பார்கள். உருளைக்கிழங்கு கறி வேண்டுமென்றால், முதலிலேயே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாசந்திதான் வரும். இங்கு பூரி பாசந்தி சாப்பிடுவதற்கென்றே மயிலாப்பூரிலிருந்து பலர் இரவில் காரில் வருவார்கள்.

உணவக வியாபாரம் சிலருக்குப் புண்ணியத்தை மட்டுமல்லாமல், பணத்தையும் வாரிக் கொடுத்தது. பெருமளவில் வளர்ச்சி கண்டவர்கள், வி.ஆர்.ராமநாத ஐயர், சி.எம்.சர்மா, கே.சீதாராம் ராவ் ஆகியோர். ஐயருக்கும், சர்மாவுக்கும் சென்னை நகரத்தில் நூறு வீடுகள் சொந்தமாக இருந்ததாக அந்த நாளில் பரபரப்பாகப் பேசுவார்கள். அதே அளவில் வளர்ந்தவர், உடுப்பியைச் சேர்ந்த கே.கிருஷ்ணாராவ். இன்று உலகெங்கும் புகழைப் பரப்பிய உட்லண்ட்ஸ் உணவகத்தையும் விடுதியையும் நிறுவியவர் இவர்தான்.

இட்லி மாவு அரைக்கும் சாதாரண தொழிலாளியாகச் சென்னைக்கு வந்தவர். மவுண்ட் ரோடு பகுதியில் ‘உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று பல பெயர்களில் வெற்றியைக் கண்டவர். சில கூட்டாளிகளுடன் சேர்ந்து, ராயப்பேட்டை பகுதியில் ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான இடத்தை வாங்கி, உட்லண்ட்ஸ் ஓட்டல் நிறுவினார். இது, இன்றைய அளவிலும் இயங்குகிறது. அதற்குப் பிறகுதான் ராதாகிருஷ்ணன் சாலையில் இன்னொரு ஓட்டலைத் தொடங்கினார்.

தேவராஜ முதலித்தெரு பகுதியில் வெங்கட்ராம ஐயர் உணவகம் இருந்தது. அங்கு சாப்பாடு பிரபலம். தரையில் உட்கார்ந்து கொண்டுதான் சாப்பிட வேண்டும். மேஜை, நாற்காலி எல்லாம் கிடையாது. இங்கு என்ன விசேஷமென் றால், ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு காய் கிடைக்கும். கூட்டம் அலைமோதுவதால் பரிமாறப்படும் காய்கறிகள் உடனே தீர்ந்து விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உருளைக்கிழங்கு பொரியல் என்றால், அரைமணி கடந்து சென்றால் வாழைக்காய் பொரியல் பரிமாறப்படும். அடுத்து கருணைக்கிழங்கு பொரியல் கிடைக்கும். பலர் டிக்கெட் வாங்குவதற்கு முன்பு, ‘இப்ப என்னய்யா பொரியல்?’ என்று கேட்டு வாங்குவார்கள். அவ்வளவு பிரபலம் இந்த வெங்கட்ராம ஐயர் ஓட்டல்.

இப்படி உணவின் சுவைக்கு அடிமையானவர்கள் தேடி தேடி சாப்பிட்ட ஹோட்டல்கள் சேன்னையில் இன்றைக்கு இருக்கின்றன. உங்களுக்கு பிடித்த ஹோட்டல் எது என்ன உணவு அங்கே ஸ்பெஷல் என்று கமெண்ட் பண்ணுங்க சென்னைவாசிகளே.

English summary
Even though tens of thousands of people come to Chennai, the capital of Tamil Nadu, every day, they are looking for the best hotel to eat with a full stomach and taste on the tongue. There are many restaurants that have been talking about delicious and hot food from the time it was called Madras till today it is known as the city of Chennai. During this time of Chennai’s birthday known as Madras Day, you can visit some of the delicious restaurants in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-382-vegetarian-or-non-vegetarian-chennai-hotels-that-serve-mouth-watering-food-430632.html