மெட்ராஸ் டே:ஒரு வாரத்துக்கு கொண்டாடும் சென்னை மாநகராட்சி- வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மெட்ராஸ் டே 382- இன்று முதல் ஒரு வாரத்துக்கு சென்னை மாநகராட்சி கொண்டாடுகிறது. மெட்ராஸ் டே-வை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் கீழ் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலித்து கொண்டிருக்கின்றன.

உலகின் பெருநகரங்களில் ஒன்றாக திகழும் இன்றைய சென்னை 382 ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது. இன்றைய சென்னை நிலப்பரப்பில் அன்று பல குக்கிராமங்கள், ஏரிகள் என நிறைந்து கிடந்தன.

சைவமா? அசைவமா சுவையில் நீங்கள் எந்த வகை? வாய்க்கு ருசியாக உணவளிக்கும் சென்னை ஹோட்டல்கள்சைவமா? அசைவமா சுவையில் நீங்கள் எந்த வகை? வாய்க்கு ருசியாக உணவளிக்கும் சென்னை ஹோட்டல்கள்

இந்தியாவுக்கு வர்த்தகம் செய்ய கிழக்கிந்திய கம்பெனியினராகிய ஆங்கிலேயர்கள் வந்தவாசியை ஆண்டு வந்த தாமல் வெங்கடப்ப நாயக்கரிடம் இன்றைய சென்னையில் ஒரு சிறு நிலப்பகுதியை- இன்றைய தலைமை செயலகம் உள்ள கோட்டை பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் பெற்றனர். அந்த சிறுநிலப்பகுதிக்கு தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக சென்னை பட்டினம் என பெயரிடப்பட்டது. அதேகால கட்டத்தில் சாந்தோம் துறைமுகத்தை உருவாக்கி மெட்ராஸ் எனவும் அழைத்தனர்.

அன்றைய சென்னை மாகாணம்

பின்னர் ஆங்கிலேயர்கள் கை ஓங்கிய நிலையில் சென்னைப்பட்டினம் விரிவடைந்து பிரமாண்ட வளர்ச்சியை பெற்று மதராஸ் மாகாணம்- மெட்ராஸ் மாகாணமாக உருவெடுத்தது. தமிழில் சென்னை, மதராஸ், மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்தது. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது இந்த மதராஸ் மாகாணம் பெருநிலப்பரப்பு கொண்டதாக இருந்தது. இன்றைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒடிஷாவின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே விரிந்து கிடந்தது.

தமிழ்ந்நாடு பெயர் மாற்றம்

நாடு விடுதலை அடைந்த பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போதும் மெட்ராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டது. 1969-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என பெயர்ம மாற்றம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ல் மெட்ராஸ் என்ற பெயர் நீக்கப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் சென்னை- Chennai என்றே அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் சென்னை தினம் அதாவது மெட்ராஸ் டே கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரத்துக்கு இன்று வயது 382.

வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை

மெட்ராஸ் டே-வை கொண்டாடும் வகையில் சென்னை மாநகராட்சி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாக கட்டிடமான ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சியின் கீழ் உள்ள கடிடடங்கள், காப்பகங்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்று நடுதல், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைத்தல், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்துதல் ஆகியவையும் நடத்தப்பட உள்ளன.

மாநகராட்சியின் நிகழ்ச்சிகள்

சிங்கார சென்னை எனும் தலைப்பில் ஓவிய போட்டி மற்றும் புகைப்படபோட்டிகள் ஏற்கனவே நடத்தப்பட்டன. இன்று மாநகராட்சி கட்டிட சுவர்கள், பாலங்களின் கீழுள்ள இடங்களில் மற்றும் இதர இடங்களில் வரைபட போட்டி நடைபெற உள்ளது. சென்னை பெருநகரின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து வரும் இன்று முதல் 28-ந்தேதிக்குள் ரிப்பன் மாளிகையில் உள்ள சீர்மிகு நகர திட்ட அலுவலகத்தில் வழங்கலாம். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் வரையப்படும் வண்ண ஓவியங்களை செல்பி எடுத்து 9445190856 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த சுவர் ஓவியங்கள் மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட உள்ளது. சென்னையில் உள்ள பூங்காக்கள், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து சென்னை மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரலாம்.

English summary
Greater Chennai Corporation is Celebrating Madras Day 382 today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/greater-chennai-corporation-celebrates-madras-day-382-on-today-430633.html