சென்னை மாநகராட்சி – கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்… – www.patrikai.com – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து  கொரோனா தடுப்பூசி சிறப்பு  முகாமை இன்று நடத்தியது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதால், அதிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று  40ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள டீச்சர்ஸ் காலனிமற்றும் அருகே உள்ள மூலக்கடை, காந்திநகர், எம்.ஆர்.நகர், முத்தமிழ்நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மாநகராட்சியுடன் டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்து தடுப்பூசி  சிறப்பு முகாமை இன்று ஏற்பாடு செய்தது. அதன்படி,

இன்று காலை 7 மணி முதல் மாலை வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ம டீச்சர்ஸ்காலனி குடியிருப்போர் நலச்சங்கம் அமைந்துள்ள பகுதியில், 234 ஜூவல்ஸ் கடைக்கு எதிரில், தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டி. சினேகா, ஐ.ஏ.எஸ். (கல்வி), கூடுதல் சுகாதார அதிகாரி சாய்துதா, கூடுதல் வருவாய் அதிகாரி ராமன் உள்பட மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் வருகை தந்து பார்வையிட்டனர்.

தடுப்பூசி முகாமையொட்டி கடந்த இரு நாட்களாக டீச்சர்ஸ் காலனிகு டியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர் முகாமுக்கு வந்து தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். முகாமுக்கான ஏற்பாட்டை டீச்சர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Source: https://patrikai.com/kodungaiyur-teachers-colony-welfare-association-conducted-corona-special-vaccination-camp-with-chennai-corporation/