சென்னை தம்பதிகள் டெல்லியில் கைது! ரூ21,000 கோடி ஹெராயின் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்காக கடத்தப்பட்டதா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

டெல்லி: குஜராத்தில் 3,000 கிலோ எடை கொண்ட ரூ21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கடத்தல் தொடர்பாக சென்னையை சேர்ந்த தம்பதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்யவே இந்த ஹெராயின் கடத்தி கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அரபிக் கடல்தான் சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களின் பிரதான நீர்வழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குஜராத் கடலோர பகுதிகள், துறைமுகங்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

குறிப்பாக குஜராத்தின் கட்ச் பிராந்திய கடற்பரப்பு போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கான இடமாக இருக்கிறது. இந்த நிலப்பரப்பு பாகிஸ்தானுடன் தரைவழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கிறது.

பயங்கரவாதிகளின் கேட் வே

ராண் ஆப் கட்ச் என்பது சதுப்பு நில பாலைவனமாகும். மழைகாலங்களில் கடல்நீர் சூழ்ந்தும் கோடைகாலங்களில் அகன்ற பாலைவனமாகவும் இருக்கும். இத்தகைய நில அமைப்புதான் போதைப் பொருட்கள் கடத்தலுக்கும் பயங்கரவாதிகள் நுழைவதற்கும் சாதகமாக இருக்கிறது.

ரூ21,000 கோடி ஹெராயின்

கட்ச் பிராந்தியத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் சில நாட்களு9க்கு முன்னர் சிக்கியது. இந்த ஹெராயின் போதைப் பொருள், ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்த நிறுவனத்தின் பெயரில் ஹெராயின் கண்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதிகாரிகள் அதிர்ச்சி

அதாவது ஒரு கண்டெய்னரில் 2,000 கிலோ ஹெராயின் இருந்தது. மற்றொரு கண்டெய்னரில் 1,000 கிலோ ஹெராயின் இருந்தது. குஜராத்தில் இதுவரை மொத்தமாக 3,000 கிலோ ஹெராயின் சிக்கியதும் இல்லை. இதனால் அதிகாரிகள் ஆடிப் போயிருக்கின்றனர்.

டெல்லியில் சென்னை தம்பதி கைது

ஹெராயின் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி தொடங்கி சென்னை வரையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் டெல்லியில் பதுங்கி இருந்த சென்னை தம்பதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் டெல்லியில் சந்தேகத்துக்குரிய ஆப்கான் நாட்டவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியா?

டெல்லியில் சிக்கியவர்களிடம் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதாவது ஹெராயின் போதைப் பொருள் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதியாக தருவதற்கு ஏதேனும் சதித் திட்டம் தீட்டி இருந்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
A Chennai couple was arrested in Delhi in 3000 kg heroin smuggling from Afghanistan.

Source: https://tamil.oneindia.com/news/delhi/3-000-kg-heroin-seized-case-chennai-couple-arrested-in-delhi-433559.html