சென்னை மக்களே கவனம்.. இனி பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ 500 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதமாக ரூ.500 விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் சென்னையில் பொது இடங்களில் குப்பைகளைக் காண்பது என்பது கிட்டதட்ட வழக்கமான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது எனச் சொல்லலாம்.

இந்த நிலையை மாற்றி சென்னையைத் தூய்மைப்படுத்தச் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!

இந்தச் சூழலில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திட்டக்கழிவுகள்

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்களால் வீடுகள் தோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன, மேலும், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

மக்களும் குப்பை மக்காத குப்பை

இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறு சுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளர்களிடம்வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

பொது இடங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையைக் குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் பொது இடங்களில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாக மாநகராட்சிக்குப் புகார் வந்துள்ளது. மேலும், கோவிட் தொற்றின் ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்த நிறுவனங்கள் அரசின் தளர்வுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு திறக்கப்படும் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவையற்ற திடக்கழிவுகள் அருகில் உள்ள பொது இடங்களில் கொட்டப்படுவதாக மாநகராட்சிக்குப் புகாராகப் பெறப்பட்டுள்ளது.

அபராதம் வசூலிக்கப்படும்

எனவே சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களின் மீது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும், சாக்கடை மற்றும் திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டும் நபர்களின்மீது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் மாநகராட்சியில் பொது இடங்களிலும் நீர் வழித்தடங்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Rs.500 fine for littering in public places in Chennai. latest announcement of Chennai Corporation.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-announced-rs-500-fine-for-littering-in-public-places-in-chennai-433591.html