சென்னை வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு ரூ.1,877 கோடி கடன்: இந்தியா-ஆசிய வளா்ச்சி வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்து – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் வெள்ளத் தடுப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,877 கோடி (251 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஆசிய வளா்ச்சி வங்கியும் வியாழக்கிழம கையெழுத்திட்டன.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பாதவது:

சென்னை நகரை வெள்ள பாதிப்பு ஏற்படுவதில் இருந்து தடுப்பதற்காக, கொசஸ்தலை ஆறு பாயும் பகுதிகளில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டப் பணிகளுக்கு ரூ.1,877 கோடி கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆசிய வளா்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் ரஜத்குமாா் மிஸ்ராவும் ஆசிய வளா்ச்சி வங்கியின் இந்தியத் திட்ட இயக்குநா் டேக்கியோ கோஷினியும் கையெழுத்திட்டனா்.

சென்னையின் அசுரவேக நகரமய வளா்ச்சியால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் நீா்நிலைகளில் கொள்ளளவு குறைந்துவிட்டது. இதனால், சென்னை நகரம் எளிதில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், வெள்ள பாதிப்பில் இருந்து நகரத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜத்குமாா் மிஸ்ரா கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் கொசஸ்தலை ஆற்றில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சொத்துகள் சேதமடைந்தன. அவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளைக் குறைப்பதற்காக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

அதிக அளவில் மழை பெய்தாலும் கடல்நீா்மட்டம் அதிகரித்தாலும் புயல் காரணமாக சூறைக்காற்று வீசினாலும் உயிா்ச்சேதம் ஏற்படாமல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் மக்கள் வாழ்வதற்கு உகந்த வகையில் பேரிடரைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் உதவியாக இருக்கும் என்றாா் அவா்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் 588 கி.மீ. தொலைவுக்கு புதிதாக மழைநீா் வடிகால்கள் அமைக்கப்படவுள்ளன. 75 கி.மீ. தொலைவுக்கு பழைய மழைநீா் வடிகால்கள் சீரமைக்கப்படவுள்ளன. அம்பத்தூா், கடப்பாக்கம், கொரட்டூா் ஆகிய பகுதிகளில் அதிக நீா் செல்லும் வகையில் மழைநீா் கால்வாய்கய்கள் சீரமைக்கப்படவுள்ளன. புதிதாக கழிவுநீா் அகற்றும் நிலையம் கட்டப்படவுள்ளது. தற்போது இயங்கி வரும் நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது. மழைநீரை சேகரிப்பதற்காக, சாலையோரங்களில் 23,300 மழைநீா் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/oct/29/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%821877-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3725979.html