ஒரேநாளில் இத்தனை கோடியா?- ஆச்சரியப்பட வைத்த சென்னை டாஸ்மாக் வசூல்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் உள்ளிட்டவை மூடப்பட்டன. அதன்பிறகு வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததால் வர்த்தகம் திறந்துவிடப்பட்டது. ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாக இருந்ததால் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக டாஸ்மாக் மட்டும் திறக்கப்படவே இல்லை. இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் சென்னையில் நேற்று திறக்கப்பட்டன.

இதனால் மது பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகள் முன்பு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இவை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. பல மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் காலையில் சீக்கிரமாகவே மது பிரியர்கள் கடைகளுக்கு முன்பு குவிந்துவிட்டனர்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

இதையொட்டி தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கடைக்கும் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. நீண்ட வரிசையில் போதிய சரீர இடைவெளி விட்டு நீண்ட நேரம் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். மதிய நேரத்திற்கு பிறகு கூட்டம் அலைமோதியதால் டாஸ்மாக் கடைகளில் இரண்டு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக எழும்பூர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போதிய சரீர இடைவெளியைப் பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் மதுவாங்கிச் சென்றனர். ஒருகட்டத்தில் போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சென்னையைப் பொறுத்தவரை வழக்கமாக நாளொன்றுக்கு ரூ.12 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். அதுவே வார இறுதியில் ரூ.15 கோடி வரை விற்பனையாகும்.

சென்னையில் கோயில்களை திறக்க அனுமதி பெறுவது எப்படி – வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் ரூ.33 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி புதிய சாதனைப் படைத்துள்ளது. இதுபற்றி டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் இப்படியொரு வசூல் ஆகியுள்ளது என்றனர். இது மது பிரியர்களுக்கும் மட்டுமல்லாது அரசுக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாகத் தான் இருக்கும் என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/tasmac-liquor-sale-crosses-rs-33-crore-in-chennai-alone/articleshow/77629357.cms