தலைமை நீதிபதியை மாற்ற கூடாது- 237 வழக்கறிஞர்கள் கொலிஜியத்திற்கு கடிதம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமைநீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி நியமிக்கப்பட்டு இருந்தார்.

சென்னை,

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார்.  

சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை மேகாலய  உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் 237 பேர் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மாற்றம் என்பது பொது நலன் அடிப்படையிலா? சிறந்த நீதி பரிபாலனத்துக்கா?என்ற கேள்வியை எழுப்பியுளனர்.  

அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 2 நீதிபதிகளை கொண்ட மேகாலய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது கேள்வியை எழுப்பியுள்ளது. எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்திற்கு  மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனத்தின் போது நடந்தது . 

இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2021/11/12200432/Madras-HC-lawyers-write-to-Collegium-against-transfer.vpf