அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி

சென்னை: நுங்கம்பாக்கத்தில் புத்துக்கோயில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி, தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரைச் சோ்ந்த பி.சசிதரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகா் பிரதான சாலையில் எங்கள் குலதெய்வமான புத்துக்கோயில் உள்ளது. அரசு புறம்போக்கு, நீா் நிலை பகுதியில் உள்ள அந்தக் கோயிலை பல ஆண்டுகளாக வணங்கி வருகிறோம். அண்மையில் அங்கு சென்ற போது அந்த கோயிலை காணவில்லை. கோயில் இடிக்கப்பட்டு, சட்டவிரோதமாக சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 14 கிரவுண்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு சட்ட விரோதமாக கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1995-1996 சென்னை டவுன் சா்வே பதிவில் அரசு புறம்போக்கு நிலம் என்று தான் உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு கடந்தாண்டு (2020) ஜனவரியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு ஆவணங்களை மாற்றம் செய்து, அந்த இடத்துக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீா் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது அரசு ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சிக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் கடந்தாண்டு (2020) நவம்பரில் புகாா் கொடுத்தேன். அதில், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரியிருந்தேன். எனது புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகாா் மீது நடவடிக்கை எடுத்து சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை மீட்குமாறு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை (நவ.24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் அலெக்சிஸ் சுதாகா் ஆஜரானாா். மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்தின் வரைபடம், மனுதாரரின் புகாா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/nov/25/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3741870.html